LOADING...
ஜெனரேட்டிவ் ஏஐ மீது நம்பிக்கை போய்விட்டது: 4,000 ஊழியர்களை நீக்கிய பிறகு சேல்ஸ்ஃபோர்ஸ் ஒப்புதல் வாக்குமூலம்
ஜெனரேட்டிவ் ஏஐ மீது நம்பிக்கை போய்விட்டது என சேல்ஸ்ஃபோர்ஸ் ஒப்புதல் வாக்குமூலம்

ஜெனரேட்டிவ் ஏஐ மீது நம்பிக்கை போய்விட்டது: 4,000 ஊழியர்களை நீக்கிய பிறகு சேல்ஸ்ஃபோர்ஸ் ஒப்புதல் வாக்குமூலம்

எழுதியவர் Sekar Chinnappan
Dec 27, 2025
08:03 pm

செய்தி முன்னோட்டம்

முன்னணி மென்பொருள் நிறுவனமான சேல்ஸ்ஃபோர்ஸ் (Salesforce), ஜெனரேட்டிவ் ஏஐ (Generative AI) தொழில்நுட்பத்தின் மீதான தனது அதீத நம்பிக்கையைக் குறைத்துக்கொள்வதாகத் தெரிவித்துள்ளது. அந்த நிறுவனம் சமீபத்தில் தனது 4,000 ஊழியர்களைப் பணிநீக்கம் செய்துவிட்டு, அந்த வேலைகளை ஏஐ மூலம் செய்ய முயன்ற நிலையில், தற்போது இந்தத் தொழில்நுட்பத்தில் உள்ள நம்பகத்தன்மை சவால்களை ஒப்புக்கொண்டுள்ளது.

சவால்கள்

சேல்ஸ்ஃபோர்ஸ் சந்தித்த சவால்கள்

சேல்ஸ்ஃபோர்ஸ் நிறுவனத்தின் கூற்றுப்படி, ஒரு வருடத்திற்கு முன்பு இருந்ததை விட இப்போது ஏஐ மாடல்கள் மீதான நம்பிக்கை குறைந்துள்ளது. இதற்குக் காரணமாக அவர்கள் முன்வைப்பவை: நம்பகத்தன்மை இன்மை: செயற்கை நுண்ணறிவு (ஏஐ) மாடல்களுக்கு எட்டுக்கும் மேற்பட்ட கட்டளைகளை வழங்கும்போது, அவை சில முக்கிய வழிமுறைகளைத் தவிர்க்கத் தொடங்குகின்றன. திசைமாற்றம் (AI Drift): வாடிக்கையாளர்கள் தொடர்பில்லாத கேள்விகளைக் கேட்கும்போது, ஏஐ சாட்போட்கள் தங்களது முக்கிய இலக்கிலிருந்து திசைமாறி விடுகின்றன. நிச்சயமற்ற தன்மை: நிறுவனத்தின் 'ஏஜென்ட்ஃபோர்ஸ்' (Agentforce) தளம் சில நேரங்களில் வாடிக்கையாளர் திருப்தி ஆய்வுகளை அனுப்பத் தவறியது கண்டறியப்பட்டது.

ஸ்ரீதர் வேம்பு

சோஹோ நிறுவனர் ஸ்ரீதர் வேம்புவின் கருத்து

இதன் காரணமாக, கணிக்க முடியாத AI முறைகளை விட, முன்கூட்டியே புரோகிராம் செய்யப்பட்ட 'டிட்டர்மினிஸ்டிக்' (Deterministic) ஆட்டோமேஷன் முறைகளில் அதிக கவனம் செலுத்தப்போவதாக சேல்ஸ்ஃபோர்ஸ் தெரிவித்துள்ளது. இந்தச் சூழல் குறித்து சோஹோ நிறுவனத்தின் இணை நிறுவனர் ஸ்ரீதர் வேம்பு தனது எக்ஸ் பக்கத்தில் விமர்சித்துள்ளார். அவர் கூறுகையில், "சேல்ஸ்ஃபோர்ஸ் ஏஐ தொழில்நுட்பத்தை மிகைப்படுத்தி விளம்பரப்படுத்தியது, இப்போது பின்வாங்குகிறது" என்று குறிப்பிட்டுள்ளார். மேலும், சோஹோ நிறுவனத்தின் அணுகுமுறை குறித்து அவர் கூறுகையில், "நாங்கள் எங்களது 'சியா ஏஐ' (Zia AI) தொழில்நுட்பத்தைச் மென்பொருள் வளையத்திற்குள் வைத்துள்ளோம். இது தகவல்களைத் திரட்டினாலும், அதன் முடிவுகள் மென்பொருளால் சரிபார்க்கப்படுவதை உறுதி செய்கிறோம். நாங்கள் தொழில்நுட்பத்தை மிகைப்படுத்துவதில்லை அல்லது வாடிக்கையாளர்கள் மீது திணித்து விலையை உயர்த்துவதில்லை." என்று தெரிவித்துள்ளார்.

Advertisement