LOADING...
உங்கள் குரலை வைத்தே உங்கள் குடும்பத்தை ஏமாற்றும் ஏஐ திருடர்கள்; தப்பிக்கும் ஒரே வழி இதுதான்; முழு விபரம்
ஏஐ குரல் மோசடிகளில் இருந்து உங்கள் பணத்தைப் பாதுகாக்க கடவுச்சொல் அவசியம்

உங்கள் குரலை வைத்தே உங்கள் குடும்பத்தை ஏமாற்றும் ஏஐ திருடர்கள்; தப்பிக்கும் ஒரே வழி இதுதான்; முழு விபரம்

எழுதியவர் Sekar Chinnappan
Feb 13, 2026
06:05 pm

செய்தி முன்னோட்டம்

தற்போது வளர்ந்து வரும் செயற்கை நுண்ணறிவு (ஏஐ) தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி, ஒருவரின் குரலை சில வினாடிகளிலேயே தத்ரூபமாகப் பிரதிபலிக்க முடியும். இதனைப் பயன்படுத்தி மோசடி செய்பவர்கள், உங்கள் குடும்ப உறுப்பினர் அல்லது நண்பரின் குரலில் போன் செய்து, "எனக்கு விபத்து ஏற்பட்டுவிட்டது", "மருத்துவமனையில் இருக்கிறேன், உடனே பணம் அனுப்பு" என்று கூறி பதற்றத்தை உருவாக்கிப் பணத்தைத் திருடுகின்றனர். இந்தியாவில் கடந்த சில மாதங்களில் ஐதராபாத் மற்றும் இந்தூர் போன்ற நகரங்களில் இத்தகைய மோசடிகள் அரங்கேறியுள்ளதாக கூறப்படுகிறது.

கடவுச்சொல்

கடவுச்சொல் என்பது என்ன?

இது உங்கள் குடும்ப உறுப்பினர்களுக்கு மட்டுமே தெரிந்த ஒரு ரகசிய வார்த்தை அல்லது சொற்றொடர் ஆகும். வங்கி பாஸ்வேர்டு போல அல்லாமல், இது ஒரு சாதாரண உரையாடல் போல இருக்க வேண்டும். உங்கள் குடும்பத்தைச் சேர்ந்த ஒருவர் அவசரத் தேவைக்காகப் பணம் கேட்கிறார் என்றால், அவர் உண்மையில் உங்கள் உறவினர் தானா என்பதை உறுதிப்படுத்த இந்த ரகசிய வார்த்தையைக் கேட்கலாம். எளிமையான உதாரணம்: "நம்ம வீட்டுப் பூனைக்கு பிடிச்ச உணவு எது?" அல்லது "உனக்கு பிடிச்ச சின்ன வயசு பலகாரம் என்ன?" போன்ற கேள்விகளுக்கான பதிலாக இது இருக்கலாம். ரகசியத்தன்மை: இந்த வார்த்தையை யாரிடமும் பகிரக்கூடாது, வாட்ஸ்அப் அல்லது சமூக வலைதளங்களில் பதிவு செய்யக்கூடாது.

பாதுகாப்பு

பாதுகாப்பான கடவுச்சொல்லை உருவாக்குவதற்கான விதிகள்

பிறந்தநாள், வளர்ப்புப் பிராணிகளின் பெயர் அல்லது நீங்கள் அடிக்கடி சமூக வலைதளங்களில் பயன்படுத்தும் வார்த்தைகளைத் தவிர்க்கவும். "சேஃப்டி வேர்டு என்ன?" என்று நேரடியாகக் கேட்காமல், "நான் இப்ப பனானா கேக் சாப்பிடுறேன்" என்று நீங்கள் சொன்னால், அதற்குப் பதிலாக "எனக்கு ஐஸ்கிரீம் தான் பிடிக்கும்" என அவர்கள் சொல்ல வேண்டும் என்பது போன்ற குறியீடுகளைப் பயன்படுத்தலாம். ஒருவேளை உங்கள் உறவினர் போனில் பதற்றமாகப் பேசினால், அந்த அழைப்பைத் துண்டித்துவிட்டு, உங்களுக்குத் தெரிந்த அவர்களின் வழக்கமான எண்ணிற்குத் திரும்ப அழைக்கவும். மோசடி செய்பவர்கள் உங்களைப் பதற்றமடையச் செய்து யோசிக்க விடாமல் பணத்தைக் கேட்பார்கள். ஆனால், எவ்வளவு பெரிய அவசரமாக இருந்தாலும் ஒரு நிமிடம் நிதானித்து ரகசிய வார்த்தையை உறுதிப்படுத்துவது உங்கள் வாழ்நாள் சேமிப்பைக் காக்கும்.

Advertisement

எச்சரிக்கை

டிஜிட்டல் இந்தியா எச்சரிக்கை

இந்திய அரசின் டிஜிட்டல் இந்தியா அமைப்பு சமீபத்தில் வெளியிட்டுள்ள எச்சரிக்கையில், தெரியாத எண்களில் இருந்து வரும் அவசர அழைப்புகளைக் கவனமாகக் கையாள வேண்டும் என்றும், குரல் ஒற்றுமையைக் கண்டு ஏமாற வேண்டாம் என்றும் குறிப்பிட்டுள்ளது. பிப்ரவரி 20, 2026 முதல் அமலுக்கு வரவுள்ள புதிய ஐடி விதிகளின்படி, ஏஐ மூலம் உருவாக்கப்பட்ட உள்ளடக்கங்களை சமூக வலைதளங்கள் கட்டாயம் அடையாளப்படுத்த வேண்டும் என்றாலும், தனிப்பட்ட போன் அழைப்புகளில் நாமே விழிப்புணர்வுடன் இருப்பது அவசியம். அடுத்த முறை உங்கள் நெருங்கிய உறவினர் ஒரு வித்தியாசமான எண்ணில் இருந்து அழைத்து அவசரமாகப் பணம் கேட்டால், முதலில் உங்கள் குடும்ப ரகசிய வார்த்தையைக் கேளுங்கள்!

Advertisement