ரீல்ஸ் மூலம் விளம்பர வீடியோ.. புதிய திட்டத்துடன் மெட்டா!
ரீல்ஸ் மூலம் விளம்பரம் செய்யும் முறை எவ்வளவு லாபகரமானதாக இருக்கிறது என்பது குறித்து நிறுவனங்களுக்கு தெரியப்படுத்தும் வகையில் #MadeonReels திட்டத்தை அறிமுகப்படுத்தியிருக்கிறது மெட்டா. விளம்பரமாக இல்லாமல் கதைசொல்லும் பாணியில் ரீல்ஸ் மூலம் விளம்பர வீடியோக்களை பகிர்வது வழக்கமான விளம்பர முறைகளை நிறுவனங்களுக்கு விட மிகவும் நல்ல முடிவுகளைத் தருவதாகக் குறிப்பிட்டிருக்கிறது மெட்டா. ஏற்கனவே கேட்பரி டைரிமில்க் சில்க், மாருதி நெக்ஸா, மீஷோ மற்றும் அமேசான் பிரைம் வீடியோ ஆகிய நிறுவனங்கள் ரீல்ஸ் மூலம் விளம்பரம் செய்து நல்ல வரவேற்பு இருப்பதாகத் தெரிவித்திருக்கின்றன. இந்த முடிவுகளைத் தொடர்ந்தே #MadeonReels திட்டத்தை அறிமுகப்படுத்தியிருக்கிறது மெட்டா. இதன்மூலம் தேர்ந்தெடுக்கப்படும் நிறுவனங்களை மூன்று கிரியேட்டர்களுடன் சேர்ந்து ரீல்ஸ் விளம்பரங்களை உருவாக்கி வெளியிடுவதற்கான கருவிகளை மெட்டா வழங்கும் எனத் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
மெட்டாவின் கணக்கெடுப்பு:
இந்தியாவில் ஷார்ட்-ஃபார்ம் வீடியோக்கள் மூலம் செய்யப்படும் விளம்பரங்கள் எந்த அளவிற்கு பயனர்கள் மத்தியில் தாக்கத்தை ஏற்படுத்துகிறது என்பது குறித்து பேக்ட்வொர்க்ஸ் மூலம் கணக்கெடுப்பு நடத்தியிருக்கிறது மெட்டா. கணக்கெடுப்பில் பங்கேற்றவர்களில் 82% பேர் ரீல்ஸில் காட்டப்படும் வணிகத்தைப் பின்தொடர்வதாகத் தெரிவித்திருக்கிறார்கள். மேலும், 74% பேர் ரீல்ஸ் விளம்பரங்களைப் பார்த்து விட்டு, அந்தக் குறிப்பிட்ட ரீல்ஸில் குறிப்பிட்டிருக்கும் பொருள் அல்லது சேவை குறித்து தெரிந்து கொள்ள விளம்பர நிறுவனங்களுக்கு குறுஞ்செய்தி அனுப்புவதாகத் தெரிவித்திருக்கிறார்கள். 77% பேர் ரீல்ஸ் விளம்பரங்களைப் பார்த்துவிட்டு பொருட்களை வாங்குவதாகத் தெரிவித்திருக்கிறார்கள். ரீல்ஸ் மூலம் விளம்பர வீடியோ என்பது ஒரு வெற்றிகரமான முன்னெடுப்பு எனத் தெரிவித்திருக்கிறது மெட்டா. ரீல்ஸ் மூலம் கதைசொல்லல் முறையில் பகிரப்படும் விளம்பர வீடியோவிற்கான உதாரணம் கீழே!