Page Loader
இந்திய நிறுவனங்களின் மீது அதிகரித்த ரேன்சம்வேர் இணையத் தாக்குதல்கள்!
இந்தியாவில் அதிகரித்த ரேன்சம்வேர் தாக்குதல்கள்

இந்திய நிறுவனங்களின் மீது அதிகரித்த ரேன்சம்வேர் இணையத் தாக்குதல்கள்!

எழுதியவர் Prasanna Venkatesh
May 25, 2023
11:11 am

செய்தி முன்னோட்டம்

இந்தியாவைச் சேர்ந்த 300 நிறுவனங்கள் உட்பட உலகம் முழுவதும் 14 நாடுகளைச் சேர்ந்த 3000 தகவல் தொழில்நுட்பம் அல்லது சைபர் பாதுகாப்பு நிறுவனங்களிடம் கடந்த ஜனவரி முதல் மார்ச் மாதம் வரை ஆய்வு ஒன்றை நடத்தியது பிரிட்டனைச் சேர்ந்த சோபோஸ் சைபர் பாதுகாப்பு நிறுவனம். அந்த ஆய்வு குறித்த அறிக்கையை தற்போது வெளியிட்டிருக்கிறது. அந்த அறிக்கையில் இந்தியாவில் சென்னை, பெங்களூரு, கொல்கத்தா, டில்லி மற்றும் மும்பை ஆகிய நகரங்களைச் சேர்ந்த நிறுவனங்கள் கடந்த 2022-ம் ஆண்டில் அதிகளவில் ரேன்சம்வேர் தாக்குதல்களை சந்தித்திருப்பதாகக் குறிப்பிடப்பட்டிருக்கிறது. ஒரு கணினியில் உள்ள தகவல்களை ஹேக் செய்து, அதனை உரிமையாளர்கள் பயன்படுத்த முடியாத வகையில் லாக் செய்து, பின்னர் அதனை விடுவிக்க பணம் கோருவதே ரேன்சம்வேர் தாக்குதல் எனப்படுகிறது.

இணையத் தாக்குதல்

என்ன காரணம்: 

இந்தியாவில் நடைபெற்ற ரேன்சம்வேர் தாக்குதல்களில் 35%, அந்நிறுவனங்களில் இருந்து பாதுகாப்புக் குறைபாட்டால் நிகழ்ந்திருக்கிறது. 33% தாக்குதல்களில், தேவையான தகவல்கள் கண்டறியப்பட்டு அதன் மூலம் நிகழ்ந்திருக்கிறது. தீங்கிழைக்கும் நோக்கத்தோடும் அனுப்பப்படும் மின்னஞ்சல்கள், பிஷ்ஷிங் ஆகியவை மூலமாகவும் இணையத் தாக்குதல்கள் நிகழ்ந்திருக்கின்றன. பாதிக்கப்பட்ட நிறுவனங்களில் 77% நிறுவனங்களில் தகவல்களை லாக் செய்திருக்கின்றனர், 38% நிறுவனங்களில் தகவல்கள் திருடப்பட்டிருக்கின்றன, தகவல்கள் லாக் செய்யப்பட்டவர்களில் 44% பேர் ஹேக்கர்கள் கேட்ட தொகையைக் கொடுத்து தங்கள் நிறுவனத் தகவல்களை மீட்டிருக்கிறார்கள். பாதிக்கப்பட்ட நிறுவனங்களில் 85% நிறுவனங்கள் இது போன்ற இணையத் தாக்குதல்களால் தங்களுக்கு வணிக இழப்போ அல்லது வருவாய் இழப்போ நிகழ்ந்திருப்பதாகத் தெரிவித்திருக்கின்றன.