சந்திரயான் 3: நிலவின் மேற்பரப்பில் இறக்கப்பட்டது பிரஞ்யான் ரோவர்
நேற்று மாலை 6.04 மணிக்கு சந்திரயான் 3யின் தரையிறக்கத்துடன் வரலாற்று சிறப்புமிக்க தருணத்தைப் பதிவு செய்தது இந்தியா. நிலவின் தென் துருவப் பகுதியில் முதல் முறையாக தரையிறங்கிய நாடு என்ற பெருமையுடன், நிலவில் மென் தரையிறக்கத்தை மேற்கொண்ட நாடுகளின் பட்டியலில் நான்காவதாக இணைந்திருக்கிறது இந்தியா. சந்திரயான் 3 திட்டத்தின் கீழ், விக்ரம் லேண்டர் மற்றும் பிரஞ்யான் ரோவர் ஆகிய இரண்டும் நிலவுக்கு அனுப்பப்பட்டன. லேண்டர் நேற்று வெற்றிகரமாகத் தரையிறங்கிய நிலையில், லேண்டரில் இருந்து ரோவரை இன்று காலை நிலவின் மேற்பரப்பில் இறக்கியிருக்கிறது இஸ்ரோ. லேண்டர் மற்றும் ரோவர் ஆகிய இரண்டிலும், அறிவியல் பரிசோதனைகளை மேற்கொள்வதற்கான கருவிகள் பொருத்தப்பட்டிருக்கின்றன. அவற்றைக் கொண்டு அடுத்த 14 நாட்களுக்கு நிலவின் மேற்பரப்பில் அறிவியல் பரிசோதனைகள் மேற்கொள்ளப்படவிருக்கின்றன.
நிலவின் மேற்பரப்பில் இந்தியாவின் சின்னம்:
நேற்றே லேண்டர் தரையிறக்கப்பட்டாலும், அந்த நடவடிக்கையால் எழும் தூசி மண்டலம் அடங்குவதற்காகக் காத்திருந்து, அது அடங்கிய பின்பு தற்போது நிலைவில் இறக்கப்பட்டிருக்கிறது ரோவர். தூசி மண்டலம் அடங்குவதற்கு முன்பே ரோவரைத் தரையிறக்கினால், அதில் பொருத்தப்பட்டிருக்கும் அறிவியில் உபகரணங்கள் மற்றும் கேமராக்கள் பாதிக்கப்படுவதற்கான வாய்ப்புகள் இருந்தது குறிப்பிடத்தக்கது. நிலவின் இயக்கப்படும் போது, இந்தியாவின் சின்னமான அசோக ஸ்தூபியையும், இஸ்ரோவின் சின்னத்தையும் நிலவின் மேற்பரப்பில் பதிக்கவிருக்கிறது பிரஞ்யான் ரோவர். பிரஞ்யான் ரோவரின் பின்பக்க சக்கரங்களில், ஒரு சக்கரத்தில் அசோக ஸ்தூபியன் சின்னமும், மற்றொரு சக்கரத்தில் இஸ்ரோவின் சின்னமும் பொறிக்கப்பட்டிருக்கிறது. இதன் மூலம், நிலவின் மேற்பரப்பில் தன்னுடைய இயக்கத்தின் போது இரு சின்னங்களையும் தரையில் பதிவிக்கவிருக்கிறது பிரஞ்யான்.