டீசலும் இல்லை, கரண்டும் இல்லை! இந்தியாவின் முதல் ஹைட்ரஜன் ரயில் எப்படி இயங்குகிறது?
செய்தி முன்னோட்டம்
இந்திய தொழில்நுட்பத் துறையின் அடுத்தகட்ட பாய்ச்சலாக, நாட்டின் முதலாவது ஹைட்ரஜன் ஆற்றல் மூலம் இயங்கும் ரயிலை பிரதமர் நரேந்திர மோடி ஹரியானாவில் தொடங்கி வைத்தார். இதன் மூலம், உலகளவில் ஹைட்ரஜன் அடிப்படையிலான இரயில் போக்குவரத்தை பரிசோதிக்கும் நாடுகளின் குழுவில் இந்தியாவும் இணைந்துள்ளது. வழக்கமான ரயில்களைப் போல இந்த ஹைட்ரஜன் ரயில் டீசலில் இயங்குவதில்லை; அல்லது மின்சார ரயில்களை போல தண்டவாளத்திற்கு மேல் உள்ள ஓவர்ஹெட் (OHE) கம்பிகளில் இருந்து மின்சாரத்தை இழுப்பதும் இல்லை. மாறாக, இது தனக்கு தேவையான மின்சாரத்தை ரயிலின் உள்ளேயே இருக்கும் ஒரு மினி மின் உற்பத்தி நிலையம் மூலம் தயாரித்துக் கொள்கிறது. இந்தத் தொழில்நுட்பத்தின் மூலம் ரயிலில் இருந்து புகைக்குபதிலாக வெறும் தண்ணீரும், வெப்பமும் மட்டுமே கழிவாக வெளியேறும்.
உற்பத்தி
மின்சாரம் எவ்வாறு உற்பத்தியாகிறது?
ரயிலின் கூரையின் மீது அதிக அழுத்தம் கொண்ட தொட்டிகளில் ஹைட்ரஜன் வாயு சேமித்து வைக்கப்பட்டிருக்கும்.
ரயில் இயங்கத் தொடங்கும்போது, இந்த ஹைட்ரஜன் வாயு வளிமண்டலத்தில் உள்ள ஆக்சிஜனுடன் ஒரு Fuel Cell அமைப்பிற்குள் வேதிவினைக்கு உட்படுத்தப்படுகிறது.
இந்த மின்வேதியியல் வினையானது மின்சாரத்தை உருவாக்குகிறது.
இந்த மின்சாரம் ரயிலின் மோட்டார்களை இயக்குகிறது.
இதில் எரிப்பு (Combustion) எதுவும் நிகழாததால், இது முற்றிலும் சத்தமில்லாமலும், மாசற்ற முறையிலும் இயங்குகிறது.
பேட்டரிகள்
பேட்டரிகள் ஏன் பயன்படுத்தப்படுகின்றன?
இந்த ரயிலில் ஹைட்ரஜன் பியூவல் செல்களுடன் இணைந்து அதிநவீன பேட்டரிகளும் பொருத்தப்பட்டுள்ளன.
ரயில் வேகமாக முடுக்கப்படும்போது பியூவல் செல் மற்றும் பேட்டரிகள் இரண்டும் இணைந்து மின்சாரத்தை வழங்குகின்றன.
அதேபோல, ரயில் நிறுத்தப்படும்போது வீணாகும் ஆற்றலானது 'ரீஜெனரேட்டிவ் பிரேக்கிங்' தொழில்நுட்பம் மூலம் மீண்டும் மின்சாரமாக மாற்றப்பட்டு பேட்டரிகளில் சேமிக்கப்படுகிறது.
இது ஹைட்ரஜன் நுகர்வைக் குறைக்க உதவுகிறது.
சிறப்பம்சங்கள்
இந்திய ரயிலின் சிறப்பம்சங்கள் என்ன?
இந்திய ரயில்வேயின் 'ஹைட்ரஜன் ஃபார் ஹெரிட்டேஜ்' திட்டத்தின் கீழ் இந்த ரயில் உருவாக்கப்பட்டுள்ளது.
ஹரியானாவின் ஜிந்த் - சோனிபட் வழித்தடத்தில் இயக்கப்படவுள்ள இந்த ரயில், மணிக்கு 110 கிமீ வேகத்தில் செல்லும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
இதில் மேம்பட்ட தீ மற்றும் புகை கண்டறியும் அமைப்புகள், சிசிடிவி கண்காணிப்பு மற்றும் நவீன பயணியர் வசதிகள் செய்யப்பட்டுள்ளன.
ஏற்கனவே ஜெர்மனி, பிரான்ஸ், சீனா, பிரிட்டன் ஆகிய நாடுகள் இத்தொழில்நுட்பத்தை பயன்படுத்தி வரும் நிலையில், இந்தியாவின் 'தேசிய பசுமை ஹைட்ரஜன் இயக்கத்திற்கு' இத்திட்டம் பெரும் வலுசேர்த்துள்ளது.