இப்போது, ஆண்களுக்கும் 12 வார பேறுகால விடுப்பு: பைசர் இந்தியா அறிவிப்பு
மருந்து தயாரிப்பாளரான பைசர் இந்தியா, பாகுபாடற்ற பணிச்சூழலை மேம்படுத்தும் ஒரு பகுதியாக, அதன் ஆண் ஊழியர்களுக்கு, 12 வார மகப்பேறு விடுப்புக் கொள்கையை அறிமுகப்படுத்தியுள்ளது. குழந்தை பிறப்பை எதிர்நோக்கும் மற்றும் குழந்தை பெற்ற தந்தைகள், என இருவருமே இந்த விடுப்பை எடுக்கலாம். அதற்கேற்றாற்போல், இந்த விடுப்பை இரண்டு ஆண்டுகளுக்குள் எப்போது வேண்டுமானாலும் எடுத்து கொள்ளலாம் என்று பைசர் அறிவித்துள்ளது. இந்த புதிய விடுப்புக் கொள்கை, ஜனவரி 1, 2023 முதல் செயல்படுத்தப்படும் என்று கூறியுள்ளது. மேலும், ஈன்றெடுக்கும் தந்தை மற்றும் வளர்ப்புத் தந்தைகள் என இருவருக்கும் இந்த கொள்கை சேரும் என கூறியுள்ளது. இந்த விடுப்பு காலம், இரண்டு வாரம் முதல், ஆறு வாரங்கள் வரை எடுக்கலாம் என அறிக்கை கூறுகிறது.
பைசரின் மகப்பேறு கொள்கை
பேறு காலத்தில் ஏதேனும் சிக்கல்கள் ஏற்பட்டால், பணியாளருக்கு கூடுதல் விடுப்பு அளிக்கப்படும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இதோடு, நிறுவனத்தின் விடுப்புக் கொள்கையின்படியும், ஊழியர்கள் கூடுதல் விடுப்பு எடுக்க அனுமதிக்கப்படுவர், என்று அந்நிறுவனம் கூறியது. இந்த நிறுவன விடுப்பு கொள்கையானது, ஏற்கனவே தரப்படும் சிறு விடுப்பு, மருத்துவ விடுப்பு மற்றும் தேர்ந்தெடுக்கப்பட்ட விடுமுறைகள் ஆகும். பைசர் இந்தியாவின், மக்கள் அனுபவத்தின் இயக்குனர் ஷில்பி சிங் கூறுகையில், இதுபோன்ற ஒரு முற்போக்கான கொள்கையானது, பணியிடத்தில் பாலின பாகுபாட்டை நீக்க உதவும். 12 வார மகப்பேறு விடுப்புக் கொள்கை, எங்கள் ஆண் ஊழியர்களுக்கும், அவர்களது துணையும், பெற்றோராக மாறிய அனுபவத்தையும், மகிழ்ச்சியான தருணங்களையும் கொண்டாடுவதற்கு நிச்சயமாக உதவும், என்றும் அவர் கூறினார்.