
காப்புரிமை சிக்கலை தவிர்க்க ஊடக நிறுவனங்களுக்கு வருவாய் திட்டத்தை அறிவித்தது Perplexity AI
செய்தி முன்னோட்டம்
கூகுளுக்குப் போட்டியாக ஒரு செயற்கை நுண்ணறிவு தேடுபொறியை உருவாக்கும் ஸ்டார்ட்அப் நிறுவனமான Perplexity நிறுவனம் ஊடக நிறுவனங்களுடனான விமர்சனங்கள் மற்றும் சட்டப் போராட்டங்களைத் தீர்க்க ஒரு முக்கிய முயற்சியை அறிவித்துள்ளது. அதன்படி தங்கள் உள்ளடக்கத்தைப் பயன்படுத்துவதற்காக வெளியீட்டாளர்களுக்கு ஈடுசெய்யும் நோக்கில், $42.5 மில்லியன் நிதி ஆதரவுடன் ஒரு வருவாய்-பகிர்வு திட்டத்தை இந்த நிறுவனம் தொடங்கியுள்ளது. செயற்கை நுண்ணறிவு இணையத்தை மேம்படுத்த உதவுகிறது என்றாலும், பதிப்பாளர்கள் பணம் பெற வேண்டியது அவசியம் என்று Perplexity தலைமைச் செயல் அதிகாரி அரவிந்த் ஸ்ரீனிவாஸ் தெரிவித்துள்ளார். சாட்ஜிபிடி மற்றும் கூகுளின் ஏஐ ஓவர்வியூஸ் போன்ற கருவிகள் மூலம் உருவாக்கப்படும் ஏஐ பதில்கள், ஊடகத் தளங்களுக்கான மதிப்புமிக்க வெப் டிராஃபிக்கை குறைத்துவிட்டதாக ஊடகத் துறையினர் அஞ்சுகின்றனர்.
பழமையானது
பழமையான வணிக மாதிரி
இந்த கிளிக் அடிப்படையிலான பாரம்பரிய வணிக மாதிரி பழமையானது என்று Perplexity நிராகரிக்கிறது. புதிய திட்டத்தின் கீழ், Perplexity-இன் காமெட் வெப் பிரவுசர் மூலம் ஒரு வெளியீட்டாளரின் உள்ளடக்கம் அணுகப்படும்போது, தேடல் வினவல்களில் காட்டப்படும்போது, அல்லது காமெட்டின் ஏஐ உதவியாளரால் பயன்படுத்தப்படும்போது, அந்தப் பதிப்பாளர் பணம் ஈட்ட முடியும். இந்த நிதி, காமெட் பிரவுசரின் புதிய சந்தா பிரிவான காமெட் பிளஸ் மூலம் ஈட்டப்படும் வருவாயிலிருந்து கிடைக்கும். சந்தாதாரர்கள் மாதத்திற்கு $5 செலுத்தி உள்ளடக்கத்தைப் பயன்படுத்த முடியும். இதில் பதிப்பாளர்களுக்கு 80% வருவாய் பங்கு வழங்கப்படும். மீதமுள்ளதை Perplexity வைத்துக் கொள்ளும்.
சட்டப் போராட்டம்
சட்டப் போராட்டத்திற்கு மத்தியில் அறிவிப்பு
மற்ற ஏஐ நிறுவனங்கள் பெரு நிறுவனங்களுடன் பெரிய அளவிலான ஒப்பந்தங்கள் மூலம் உரிமம் பெற்றாலும், Perplexity தான் உள்ளடக்கப் பயன்பாடு மற்றும் வினவல்களில் அவற்றின் தோற்றத்தின் அடிப்படையில் பதிப்பாளர்களுக்கு ஈடுசெய்யும் ஒரு புதிய முறையை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த அறிவிப்பு ஃபோர்ப்ஸ் மற்றும் கொண்டே நாஸ்ட் போன்ற ஊடக நிறுவனங்கள், தங்கள் உள்ளடக்கத்தை அனுமதி இல்லாமல் பயன்படுத்தியதாக Perplexity மீது குற்றம் சாட்டி வரும் சட்டப் போராட்டங்களுக்கு மத்தியில் வந்துள்ளது. மேலும், நியூஸ் கார்ப்பின் டவ் ஜோன்ஸ் மற்றும் நியூயார்க் போஸ்ட் தொடர்ந்த பதிப்புரிமை மீறல் வழக்கைத் தள்ளுபடி செய்யக் கோரிய Perplexity-இன் மனு கடந்த வாரம் நிராகரிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.