Loading...
முன்னறிவிப்பின்றி ஒரே போன் காலில் தூக்கிய பேபால்! இந்தியாவில் 600 ஊழியர்கள் திடீர் பணிநீக்கம்
பேபால் நிறுவனத்தில் 600 இந்திய ஊழியர்கள் திடீர் பணிநீக்கம்

முன்னறிவிப்பின்றி ஒரே போன் காலில் தூக்கிய பேபால்! இந்தியாவில் 600 ஊழியர்கள் திடீர் பணிநீக்கம்

எழுதியவர் Sekar Chinnappan
Sep 03, 2026
12:37 pm

செய்தி முன்னோட்டம்

முன்னணி டிஜிட்டல் பணப்பரிவர்த்தனை நிறுவனமான பேபால், இந்தியாவில் பணியாற்றி வந்த சுமார் 600 ஊழியர்களை எவ்வித முன்னறிவிப்புமின்றித் திடீரென பணிநீக்கம் செய்துள்ளது. இது இந்தியாவில் உள்ள அந்நிறுவனத்தின் மொத்த ஊழியர் எண்ணிக்கையில் 10 சதவீதமாகும். சென்னை, பெங்களூரு மற்றும் ஹைதராபாத் ஆகிய நகரங்களில் உள்ள அலுவலகங்களில் பணியாற்றி வந்த தொழில்நுட்பம், பொறியியல், செயல்பாடுகள் மற்றும் நிதி பிரிவை சேர்ந்த ஊழியர்கள் இதனால் நேரடியாகப் பாதிக்கப்பட்டுள்ளனர்.

நடவடிக்கை

முன்னறிவிப்பின்றி போன் காலில் எடுக்கப்பட்ட நடவடிக்கை

ஆகஸ்ட் 31 திங்கள்கிழமை காலையில் ஆன்லைன் காலில் இணையுமாறு அழைப்பு வந்ததாகவும், அதில் கலந்துகொண்ட ஊழியர்களிடம் பணிநீக்கம் செய்யப்பட்ட தகவல் தெரிவிக்கப்பட்டு உடனடியாக அக்சஸ் ரத்து செய்யப்பட்டதாகவும் பாதிக்கப்பட்ட ஊழியர்கள் கூறியுள்ளனர்.

இழப்பீட்டுத் தொகையாக ஒரு மாத சம்பளம் வழங்குவதாக உறுதியளிக்கப்பட்ட போதிலும், இறுதி பணத்தீர்வு குறித்து இன்னும் தெளிவான பதில் கிடைக்கவில்லை என அவர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.

இந்த மறுகட்டமைப்பின் முடிவில் இந்தியாவில் மேலும் பலர் வேலை இழக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது.

பின்னணி

உலகளாவிய பணிநீக்க நடவடிக்கையின் பின்னணி

உலகளவில் செலவுகளைக் குறைக்கும் வகையில் தனது மொத்த ஊழியர்களில் 20 சதவீத பேரைக் குறைக்க பேபால் திட்டமிட்டுள்ளது.

இதன் ஒரு பகுதியாக அயர்லாந்தில் 164 ஊழியர்களும், இஸ்ரேலில் 70 ஊழியர்களும் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

ஐடி துறையில் நிலவும் இந்த மந்தநிலை காரணமாகப் பேபால் மட்டுமின்றி உபெர், ஆரக்கிள் போன்ற பிற முன்னணி நிறுவனங்களும் ஆயிரக்கணக்கான ஊழியர்களைத் தொடர்ந்து பணிநீக்கம் செய்து வருவது சர்வதேச அளவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ADVERTISEMENT