பேப்பர் கப்பில் டீ, காபி குடிப்பது ஆபத்தா? மைக்ரோபிளாஸ்டிக் குறித்த புதிய ஆய்வில் பகீர் தகவல்
செய்தி முன்னோட்டம்
தினசரி பயன்பாட்டில் நாம் பயன்படுத்தும் ஒருமுறை மட்டுமே பயன்படுத்தக்கூடிய பேப்பர் கப்களில் சூடான காபி அல்லது தேநீரை ஊற்றும்போது, மில்லியன் கணக்கிலான மைக்ரோபிளாஸ்டிக் துகள்கள் பானத்தில் கலப்பதாக குயின்ஸ்லேந்து பல்கலைக்கழகத்தின் புதிய ஆய்வு எச்சரித்துள்ளது. பேப்பர் கப்கள் பார்ப்பதற்கு முழுமையாக காகிதத்தால் செய்யப்பட்டது போல் தெரிந்தாலும், அவற்றின் உட்பகுதியில் நீர் கசியாமல் இருப்பதற்காகவும், உறுதிக்காகவும் மெல்லிய பிளாஸ்டிக் பூச்சுகள் பூசப்பட்டிருப்பதே இதற்குக் காரணமாகும்.
அதிக பிளாஸ்டிக்
மக்கும் பிளாஸ்டிக் கப்புகளில் 12 மடங்கு அதிக பிளாஸ்டிக் துகள்கள்
பாராம்பரிய பாலிஎதிலீன் பூச்சு கொண்ட கப்புகள் மற்றும் மக்கும் தன்மையுடைய பாலில்லேக்டிக் அமிலம் பூச்சு கொண்ட கப்புகள் என இரண்டையும் ஆய்வாளர்கள் பரிசோதித்தனர்.
இதில் ஆச்சரியமளிக்கும் விதமாக, மக்கும் பிளாஸ்டிக் பூச்சு கொண்ட கப்புகளில் இருந்து சாதாரண பிளாஸ்டிக் கப்புகளை விட 12 மடங்கு அதிகமாக பிளாஸ்டிக் துகள்கள் வெளியேறுவது கண்டறியப்பட்டது.
மக்கும் பிளாஸ்டிக் கப்புகளில் ஒரு மில்லி லிட்டர் திரவத்தில் சுமார் 43 லட்சம் நானோ பிளாஸ்டிக் துகள்கள் கலப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
ஆரோக்கிய கவலை
மனித ஆரோக்கியம் மற்றும் உணவுப் பாதுகாப்பு குறித்த கவலைகள்
மனிதனின் தலைமுடியை விட ஆயிரம் மடங்கு சிறியதாக இருக்கும் இந்த நானோ பிளாஸ்டிக் துகள்கள், உணவு மற்றும் பானங்கள் மூலம் மனித உடலுக்குள் நேரடியாக செல்கின்றன.
நாம் அன்றாடம் பயன்படுத்தும் உணவுப் சேமிப்புச் சாதனங்கள் மற்றும் கப்புகள் மனித ஆரோக்கியத்தில் ஏற்படுத்தும் பாதிப்புகள் குறித்துத் தெளிவான வழிகாட்டுதல்கள் தேவை என்பதை இந்த ஆய்வு சுட்டிக்காட்டுகிறது.
சுற்றுச்சூழல் பாதுகாப்பிற்காகப் பயன்படுத்தப்படும் மாற்றுப் பொருட்களும் மனித உடலுக்குப் பாதுகாப்பானதாக இருக்க வேண்டும் என ஆய்வாளர் டாக்டர் எல்விஸ் ஓகோஃபோ தெரிவித்துள்ளார்.
கோரிக்கை
அரசுகளுக்கும் உற்பத்தியாளர்களுக்கும் ஆய்வாளர்களின் கோரிக்கை
சூடான பானங்களைப் பயன்படுத்தும் காகிதக் கோப்பைகளில் எத்தகைய பிளாஸ்டிக் பூச்சுகள் பயன்படுத்தப்பட்டுள்ளன என்பதை நுகர்வோருக்குத் தெளிவுபடுத்தும் லேபிள்களை ஒட்ட வேண்டும் என ஆய்வாளர்கள் வலியுறுத்துகின்றனர்.
மேலும், உணவுப் பாதுகாப்பு சட்டங்களை இயற்றுபவர்கள் சூடான திரவங்களில் பிளாஸ்டிக் துகள்கள் கலப்பதைத் தடுக்கும் புதிய பாதுகாப்பு விதிமுறைகளைக் கொண்டு வர வேண்டும்.
உற்பத்தியாளர்களும் சூடான திரவங்களில் பிளாஸ்டிக் துகள்களை வெளியிடாத பாதுகாப்பான கப் பூச்சுகளை உருவாக்க முன்வர வேண்டும்.