ட்விட்டருக்குப் போட்டியாக உருவாகி வரும் சமூக வலைத்தளங்கள்
ப்ராஜெக்ட் 92 என்ற குறியீட்டுப் பெயரில் ட்விட்டருக்கு போட்டியாக புதிய சமூக வலைத்தளம் ஒன்றை உருவாக்கி வருகிறது இன்ஸ்டாகிராம். இந்த சமூக வலைத்தளமானது தவறுதலாக கூகுள் பிளே ஸ்டோரில் பட்டியலிடப்பட்டிருக்கிறது. ப்ளே ஸ்டோரில் வெளியான சிறிது நேரத்திலேயே அந்த செயலி நீக்கப்பட்டுவிட்டாலும், அது குறித்த தகவல்களும், ஸ்கிரீன்ஷாட்களும் இணையத்தில் வைரலாகப் பரவி வருகின்றன. இன்ஸ்டாகிராம் தளமானது, இந்த புதிய செயலிக்கு த்ரெட்ஸ் (Threads) என்ற பெயரைப் பயன்படுத்தியிருக்கிறது. மென்பொறியாளரும், டிப்ஸ்டருமான அலெசான்ட்ரோ பலூஸி என்பவர், ட்ரெட்ஸ் செயலியின் கூகுள் பிளே ஸ்டோர் லிங்க்குடன், அந்தத் தளம் குறித்து பிளே ஸ்டோரில் பகிரப்பட்டிருந்த புகைப்படங்களையும் ஸ்கிரீன்ஷாட் எடுத்து ட்விட்டரில் பகிர்ந்திருப்பதைத் தொடர்ந்து பலரும் அதனைப் பகிர்ந்து வருகிறார்கள்.
ட்விட்டருக்கு போட்டியாக வெளியாகவிருக்கும் சமூக வலைத்தளங்கள்:
எலான் மஸ்க் ட்விட்டரை வாங்கிய பிறகு, அந்நிறுவனம் சந்தித்து வரும் மாற்றங்களால் தொடர்ந்து வருவாயையும், பயனாளர்களையும் இழந்து வருகிறது. ட்விட்டரில் குறிப்பிட்ட சில வசதிகள் மட்டுமே முன்னர் கட்டண முறையில் வழங்கப்பட்டு வந்த நிலையில், தற்போது குறிப்பிட்ட சில வசதிகள் மட்டுமே இலவச பயனர்கள் பயன்படுத்தும் வகையில் வழங்கப்பட்டு வருகிறது. நாளுக்கு நாள் ட்விட்டர் நிறுவனம் கெடுபிடிகளை அதிகரித்து வரும் நிலையில், பயனர்கள் பலரும் ட்விட்டருக்கு மாற்றான ஒரு சமூக வலைத்தளத்தை எதிர்நோக்கிக் காத்திருக்கிறார்கள். இந்த நிகழ்வுகளைத் தொடர்ந்கு, ட்விட்டரின் முன்னாள் சிஇஓ-வான ஜாக் டார்ஸேவும், ட்விட்டருக்குப் போட்டியான ட்விட்டரைப் போலவேயான ப்ளூஸ்கை என்ற சமூக வலைத்தளம் ஒன்றை உருவாக்கி வரும் நிலையில், அந்தத் தளமும் ட்விட்டர் பயனாளர்களை ஈர்த்து வருவது குறிப்பிடத்தக்கது.