மீம்ஸ் பகிர்ந்தால் சுற்றுச்சூழல் பாதிக்குமா? ஆய்வில் வெளியான அதிர்ச்சித் தகவல்
மீம்ஸ்களைப் பகிர்வதும் பெறுவதும் பலரின் அன்றாட நடைமுறைகளில் ஒன்றாக மாறிவிட்ட நிலையில், அது எவ்வளவு ஆற்றலைப் பயன்படுத்துகிறது என்று யாரும் யோசித்திருக்க மாட்டார்கள். இருப்பினும், சமீபத்திய ஆராய்ச்சியின் படி, கிளவுட் கணினியில் சேமிக்கப்பட்ட தரவுகளில் பெரும்பாலானவை டார்க் டேட்டா வகைக்குள் அடங்கும். அதாவது அது ஒரு முறை பயன்படுத்தப்பட்டு மீண்டும் பார்க்கப்படாது. இதனால், ஆன்லைனில் நாம் பகிரும் அனைத்து மீம்களும் நகைச்சுவைகளும் தற்போது எங்காவது ஒரு டேட்டா சென்டரில் சேமிக்கப்பட்டு அங்குள்ள ஆற்றலைப் பயன்படுத்துகின்றன என்பதை இது குறிக்கிறது. இதை இன்னும் எளிமையாக சொல்வதானால், இதுபோல் சேமிக்கப்படும் பதிவுகள் கார்பன் ஃபூட்பிரிண்ட் மூலம் சுற்றுச்சூழலில் எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்துவதாக ஆய்வில் தெரியவந்துள்ளது.
லூக்ஹ்போரூஹ் பல்கலைக் கழகம் வெளியிட்ட ஆய்வு முடிவுகள்
லூக்ஹ்போரூஹ் பல்கலைக் கழக பேராசிரியரான இயான் கோட்கின்ஸன் இந்த ஆய்வின் முடிவுகளை வெளியிட்டுள்ளார். இந்த ஆய்வின்படி, தரவு கார்பன் நடுநிலையானது என்ற பிரபலமான அனுமானத்திற்கு மாறாக, ஒவ்வொரு தரவும், அது ஒரு படமாக இருந்தாலும் அல்லது இன்ஸ்டாகிராம் பதிவாக இருந்தாலும், கார்பன் ஃபூட்பிரிண்ட் இணைக்கப்பட்டுள்ளது என்று பேராசிரியர் தெளிவுபடுத்தினார். ஒரு படம் நிச்சயமாக கிரகத்தை அழிக்காது என்றாலும், ஆற்றல் நுகர்வு அடிப்படையில் இது சுற்றுச்சூழல் பாதிப்புகளை நிச்சயம் ஏற்படுத்துகிறது. உதாரணமாக ஒவ்வொரு மின்னஞ்சலும் சுமார் 4 கிராம் கார்பனுக்கு சமமாக குறிப்பிடப்படுகிறது. தற்போது இது மிகச் சிறியதாக தோன்றினாலும், எதிர்காலத்தில் இது இன்னும் அதிகரித்து நிச்சயம் சிக்கலை உருவாக்கம் என அவர் எச்சரித்துள்ளார்.