
Threads-ன் புதிய அப்டேட்டில் புதிய வசதிகளை அறிமுகப்படுத்தியிருக்கும் மெட்டா
செய்தி முன்னோட்டம்
ட்விட்டருக்கு போட்டியாக இன்ஸ்டாகிராமுடன் இணைந்து செயல்படும் வகையிலான த்ரெட்ஸ் என்ற சமூக வலைத்தளத்தை இந்த மாதத் தொடக்கத்தில் அறிமுகப்படுத்தியது இன்ஸ்டாகிராம்.
தொடக்கத்தில் பயனர்களை ஈர்த்து சில நாட்களிலேயே பல கோடி பயனர்களை பெற்றது த்ரெட்ஸ். எனினும், ட்விட்டரின் நகலாகவே வெளியாகியிருந்த காரணத்தால் தொடர்ந்து பயனர்களை தக்க வைக்க முடியாமல் தள்ளாடி வருகிறது அந்த சமூக வலைத்தளம்.
இந்நிலையில் தற்போது, த்ரெட்ஸூக்கான புதிய அப்டேட்டை வெளியிட்டிருக்கிறது மெட்டா. இந்த புதிய அப்டேட்டில், பயனர்கள் பலரும் கேட்டு வந்த பல புதிய வசதிகளை அறிமுகப்படுத்தியிருக்கிறது. த்ரெட்ஸ் அறிமுகப்படுத்தியிருக்கும் இந்த வசதிகளில் பல, ஏற்கனவே ட்விட்டர் தளத்தில் வழங்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
த்ரெட்ஸ்
த்ரெட்ஸில் அறிமுகப்படுத்தப்பட்ட புதிய வசதிகள்:
த்ரெட்ஸில் நாம் பின்தொடர்பவர்களின் பதிவுகளை மட்டும் பார்வையிடும் வகையில் 'பாலோவர்ஸ் ஃபீடு'-ஐ இந்த புதிய அப்டேட் மூலம் அறிமுகம் செய்திருக்கிறது மெட்டா. மேலும், இந்த ஃபீடானது காலவரிசைப்படி பதிவுகளை காட்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆக்டிவிட்டி ஃபீடில் இருந்தபடியே பிற பயனர்களை பின்தொடரும் வசதியை அறிமுகப்படுத்தப்பட்டிருக்கிறது. இந்த வசதி ட்விட்டரில் இல்லை.
த்ரெட்ஸூக்கு மொபைல் செயலி மட்டுமே இருக்கும் நிலையில், அடுத்த சில நாட்களில் இணையதள வெர்ஷனையும் அறிமுகப்படுத்தவிருப்பதாகத் தெரிவித்திருக்கிறார் இன்ஸ்டாகிராமின் தலைவர் ஆடம் மோஸாரி.
தற்போது த்ரெட்ஸ் தளத்தை நிலைப்படுத்துவதையும், ஏற்கனவே இருக்கும் பயனர்களை தக்க வைப்பதையுமே மனதில் கொண்டு செயல்பட்டு வருவதாக த்ரெட்ஸ் பதிவு ஒன்றிலும் குறிப்பிட்டிருக்கிறார் மார்க் ஸூக்கர்பெர்க்.