டிவி மற்றும் வெப் ப்ரௌஸரிலும் விளையாட்டுக்களை அறிமுகப்படுத்திய நெட்ஃபிலிக்ஸ்
முன்னதாக ஆண்ட்ராய்டு மற்றும் ஐஓஎஸ் தளங்களில் மட்டுமே கேம்களை வழங்கி வந்த நெட்ஃபிலிக்ஸ் நிறுவனம், தற்போது அந்த சேவையை பிற தளங்களுக்கும் விரிவுபடுத்தியிருக்கிறது. இந்த வசதியை விரைவில் வெளியிடவிருப்பதாக கடந்த வாரம் தகவல் கசிந்திருந்தது. தற்போது, அதனை முதல் முறையாக அறிமுகப்படுத்தியிருக்கிறது நெட்ஃபிலிக்ஸ். முதற்கட்டமாக, சோதனை முறையில் பிரிட்டன் மற்றும் கனடாவில் குறிப்பிட்ட பயனர்களுக்கு மட்டும் இந்த வசதியை அறிமுகப்படுத்தியிருக்கிறது அந்நிறுவனம். இந்த வசதியினைப் பெற்ற பயனர்கள், தங்களது தொலைக்காட்சி மற்றும் வெப் ப்ரௌசர்களிலும் நெட்ஃபிலிக்ஸ் அறிமுகப்படுத்தும் விளையாட்டுக்களை விளையாட முடியும். தற்போது இரண்டு விளையாட்டுக்களை மட்டும் மேற்கூறிய தளங்களிலும் விளையாடும் வகையில் அறிமுகப்படுத்தியிருக்கிறது அந்நிறுவனம்.
நெட்ஃபிலிக்ஸின் புதிய அறிமுகம்:
ஏற்கனவே பயனர்களிடம் பிரபலமாக உள்ள ஆக்ஸன்ஃபிரீ மற்றும் புதிய மோல்ஹியூஸ் மைனிங் அட்வென்சர் ஆகிய இரண்டு விளையாட்டுக்களையே தற்போது முதற்கட்டமாக அறிமுகப்படுத்தியிருக்கிறது நெட்ஃபிலிக்ஸ். ஆண்ட்ராய்டு பயனர்கள், தங்களுடைய ஸ்மார்ட்போன் நெட்ஃபிலிக்ஸ் செயலியில் உள்ள கண்ட்ரோலரையே பயன்படுத்திக் கொள்ளலாம். ஐஓஎஸ் பயனர்கள், இதற்கென கொடுக்கப்பட்டிருக்கும் செயலியை ஆப் ஸ்டோரில் தரவிறக்கம் செய்து கொள்ளலாம். வெப் ப்ரௌசர்களில் விளையாடுபவர்கள், தங்களது கீபோர்டையும் மௌஸையும் பயன்படுத்தி விளையாட முடியும். கிளவுடு ஸ்ட்ரீம்டு விளையாட்டுகளாக இருக்கும் இந்த விளையாட்டுக்களை தாங்கள் வழங்கும் ஒரு மதிப்புக்கூட்டுச் சேவையாகவே பார்க்கிறது நெட்ஃபிலிக்ஸ். மேலும், நெட்ஃபிலிக்ஸின் இந்த விளையாட்டுக்களை, அத்தளத்திற்கு சந்தா செய்தவர்கள் மட்டுமே விளையாட முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.