மெட்டாவின் மிக முக்கியமான சந்தைகளுள் ஒன்று இந்தியா
இந்திய சந்தை தங்களுக்கு மிகவும் முக்கியமானது ஒன்று, என தனியார் செய்தி நிறுவனம் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார், மெட்டாவின் இந்திய தலைமையாக செயல்பட்டு வரும் சந்தியா தேவநாதன். வரம்பற்ற வாய்ப்புகளை அள்ளித் தரும் முக்கியமான டிஜிட்டல் சந்தை என இந்தியாவைக் குறிப்பிட்டிருக்கிறார் அவர். பருப்பொருளியல் வளர்ச்சி, டிஜிட்டல் கட்டமைப்பு மற்றும் இந்தியாவில் ஃபேஸ்புக், வாட்ஸ்அப் மற்றும் இன்ஸ்டாவின் பயன்பாடு ஆகியவையே இந்தியாவை முக்கியமான சந்தையாக மெட்டா பார்ப்பதற்கான காரணமாகக் கூறியிருக்கிறார் அவர். மேலும், இந்தியாவின் டிஜிட்டல் தனிநபர் தனிநபர் தகவல் பாதுகாப்பு சட்டத்தனை புகழ்ந்திருப்பதோடு, அது தொழில்நுட்ப நிறுவனங்களுக்கு ஒரு தெளிவைக் கொடுப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் மெட்டா:
உலகளவில், இந்தியாவே மெட்டாவின் தளங்களைப் பயன்படுத்தும் பயனர்களை அதிகமாகக் கொண்ட நாடுகளின் பட்டியலில் முதலிடத்தில் இருக்கிறது. 400 மில்லியன் ஃபேஸ்புக் பயனர்களைக் கொண்ட இந்தியாவில், விளம்பர வருவாய் ஒப்பீட்டு அளவில் குறைவாகவே இருக்கிறது. எனவே, இந்தியாவில் வளர்ச்சியடைவதற்கான வாய்ப்புகள் நிறைய இருப்பதாக மெட்டா கருதுவதாகத் தெரிவித்துள்ளார் சந்தியா தேவநாதன். மேலும், இந்தியாவில் தங்கள் தளங்களில் பொய்யான தகவல்கள் பரவுவதையும், வெறுப்பு பேச்சுக்கள் அதிகரிப்பதையும் தடுக்க செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி நடடிக்கை எடுப்பதாகவும் தெரிவித்துள்ளார் அவர். 2030ம் ஆண்டிற்குள் 1 ட்ரில்லியன் டாலர்கள் டிஜிட்டல் பொருளாதாரமாக உருவெடுக்க இந்தியா இலக்க நிர்ணயித்திருப்பது, பல்வேறு புதிய வாய்ப்புகளை வழங்கியிருப்பதாகக் குறிப்பிட்டிருக்கிறார் சந்தியா தேவராஜன்.