ட்விட்டரைப் போலவே கட்டண முறையில் ப்ளூ டிக்.. புதிய அறிவிப்பை வெளியிட்டது மெட்டா!
ட்விட்டரில் உள்ள ப்ளூ டிக் அம்சத்தைப் போலவே 'சரிபார்க்கப்பட்ட கணக்கு' (Verified Account) என்ற புதிய அம்சத்தை கட்டண முறையில் தங்களது ஃபேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் தளங்களில் இந்தியாவில் வழங்கத் தொடங்கியிருக்கிறது மெட்டா. ட்விட்டரைப் போலவே கட்டண முறையில் தொடங்கப்பட்டிருக்கும் இந்த அம்சத்துடன் பயனர்களுக்கு கூடுதல் வசதிகளையும் அளித்திருக்கிறது மெட்டா. அதாவது, இந்த சரிபார்க்கப்பட்ட கணக்கு அம்சத்தை கட்டண முறையில் பெறும் வாடிக்கையாளர்களின் கணக்குகளை வேறு நபர்கள் நகலெடுத்து புதிய கணக்கு தொடங்காத வகையில் தொடர்ந்து கண்காணித்து பாதுகாப்பு அளிக்கப்படும் என உறுதியளித்திருக்கிறது மெட்டா. மேலும், இந்தக் கணக்குகளில் ஏற்படும் சின்னச் சின்ன பிரச்சினைகளை உடனடியாகக் களைய தொடர்ந்து வசதிகள் செய்து தரப்படும் எனவும் தங்களுடைய வலைப்பூவில் இடப்பட்ட பதிவில் குறிப்பிட்டிருக்கிறது அந்நிறுவனம்.
சந்தா கட்டணம் எவ்வளவு:
இந்தியாவில் ஃபேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் மொபைல் செயலிகளில் இந்த அம்சத்தைப் பெற ரூ.699 கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டிருக்கிறது. வெப் வெர்ஷனை அடுத்த வரும் நாட்களில் அறிமுகப்படுத்தவிருப்பதாகவும் அதற்கு ரூ.599 கட்டணம் எனவும் தெரிவித்திருக்கிறது மெட்டா. இந்த அம்சத்தைப் பெறும் ஃபேஸ்புக் பயனாளர்கள் 18 வயதை பூர்த்தி செய்திருக்க வேண்டும் என்றும், தங்களுடைய ஃபேஸ்புக் அல்லது இன்ஸ்டாகிராம் கணக்கில் கொடுக்கப்பட்டிருக்கும் பெயருடன் கூடிய அரசு ஆவணம் ஒன்றையும் சமர்ப்பிக்க வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளது அந்நிறுவனம். இந்த அம்சம் அறிமுகப்படுத்தப்படுவதற்கு முன்பு இதுவரை இதனை இலவசமாகப் பெற்ற கணக்குகளில் எந்த மாற்றமும் செய்யப்படாது என்றும், அந்த கணக்குகளிலும் மேற்கூறிய வசதி அப்படியே தொடரப்படும் என்றும் மெட்டா நிறுவனம் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.