மெட்டா 2026இல் அறிமுகம் செய்யும் 'மேங்கோ' மற்றும் 'அவகேடோ' ஏஐ மாடல்கள்: முக்கிய விபரங்கள்
செய்தி முன்னோட்டம்
மெட்டா நிறுவனம் தனது செயற்கை நுண்ணறிவு (ஏஐ) தொழில்நுட்பத்தில் அடுத்தகட்ட பாய்ச்சலுக்குத் தயாராகி வருகிறது. இதற்காக 2026 ஆம் ஆண்டின் முதல் பாதியில் 'மேங்கோ' (Mango) மற்றும் 'அவகேடோ' (Avocado) எனப் பெயரிடப்பட்டுள்ள இரண்டு சக்திவாய்ந்த ஏஐ மாடல்களை அறிமுகப்படுத்த அந்த நிறுவனம் திட்டமிட்டுள்ளது. இவை தற்போதுள்ள 'லாமா' (Llama) மாடல்களைக் காட்டிலும் பல மடங்கு மேம்பட்டவையாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மாடல்
மேங்கோ (Mango): வீடியோ மற்றும் இமேஜ் மாடல்
'மேங்கோ' என்பது குறிப்பாகப் படங்கள் மற்றும் வீடியோக்களை உருவாக்குவதிலும், அவற்றைப் புரிந்துகொள்வதிலும் கவனம் செலுத்தும் ஒரு மல்டிமாடல் (Multimodal) ஏஐ மாடலாகும். இது கூகுளின் 'நானோ பனானா' (Nano Banana) மற்றும் ஓபன் ஏஐயின் 'சோரா' (Sora) ஆகியவற்றுக்குப் போட்டியாக உருவாக்கப்படுகிறது. இதன் சிறப்பம்சமாக, நிஜ உலகம் எவ்வாறு இயங்குகிறது என்பதைப் புரிந்து கொண்டு, அதற்கேற்ப துல்லியமான வீடியோக்களை உருவாக்கும் 'வேர்ல்ட் மாடல்' (World Model) தொழில்நுட்பம் இதில் பயன்படுத்தப்படவுள்ளது.
கோடிங்
அவகேடோ (Avocado): மேம்பட்ட கோடிங் மற்றும் லாங்குவேஜ் மாடல்
'அவகேடோ' என்பது மெட்டாவின் அடுத்த தலைமுறைக்கான டெக்ஸ்ட்-பேஸ்டு (Text-based) லார்ஜ் லாங்குவேஜ் மாடலாகும். இது குறிப்பாகப் ப்ரோக்ராமிங் (Coding), லாஜிக்கல் ரீசனிங் மற்றும் சிக்கலான கணிதப் பிரச்சனைகளைத் தீர்ப்பதில் அதீதத் திறமையுடன் இருக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டு வருகிறது. முந்தைய லாமா மாடல்களில் இருந்த குறைபாடுகளைக் களைந்து, ஓபன்ஏஐ மற்றும் ஆந்த்ரோபிக் (Anthropic) நிறுவனங்களின் மாடல்களுக்கு இணையான செயல்திறனை இது வழங்கும் என்று மெட்டா நம்புகிறது.
புதிய உத்தி
மெட்டாவின் புதிய உத்தி மற்றும் 'சூப்பர் இன்டெலிஜென்ஸ் லேப்'
இந்த புதிய மாடல்களை உருவாக்குவதற்காக மெட்டா நிறுவனம் 'மெட்டா சூப்பர் இன்டெலிஜென்ஸ் லேப்ஸ்' (Meta Superintelligence Labs - MSL) என்ற தனிப்பிரிவை உருவாக்கியுள்ளது. இதற்காக ஓபன்ஏஐ நிறுவனத்திலிருந்து 20 க்கும் மேற்பட்ட உயர்மட்ட ஆராய்ச்சியாளர்களை மார்க் ஜுக்கர்பெர்க் ஈர்த்துள்ளார். மேலும், இந்த மாடல்கள் மெட்டாவின் வழக்கமான 'ஓபன் சோர்ஸ்' (Open-source) முறையில் இல்லாமல், வணிக ரீதியாக வருவாய் ஈட்டும் வகையில் 'குளோஸ்டு சோர்ஸ்' (Closed-source) மாடல்களாக இருக்கலாம் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.