Page Loader
Threads-ன் வெப் வெர்ஷனை விரைவில் வெளியிடவிருக்கும் மெட்டா
Threads-ன் வெப் வெர்ஷனை விரைவில் வெளியிடவிருக்கும் மெட்டா

Threads-ன் வெப் வெர்ஷனை விரைவில் வெளியிடவிருக்கும் மெட்டா

எழுதியவர் Prasanna Venkatesh
Aug 21, 2023
10:27 am

செய்தி முன்னோட்டம்

எக்ஸூக்குப் (முன்னதாக ட்விட்டர்) போட்டியாக 'த்ரெட்ஸ்' சமூக வலைத்தளத்தை கடந்த ஜூலை மாதம் அறிமுகப்படுத்தியது மெட்டா. ஆண்ட்ராய்டு மற்றும் ஐஓஎஸ் இயங்குதளங்களுக்கான செயலியாக மட்டுமே இந்த சமூக வலைத்தளம் அறிமுகப்படுத்தப்பட்டிருந்தது. இதன் வெப் வெர்ஷனை விரைவில் அறிமுகப்படுத்துவோம் என அந்நிறுவனம் கூறி வந்த நிலையில், அடுத்த வாரம் த்ரெட்ஸின் வெப் வெர்ஷன் வெளியிடப்படலாம் எனத் தகவல் வெளியாகியிருக்கிறது. இந்தத் தகவலை உறுதி செய்யும் வகையில், இன்ஸ்டாகிராமின் தலைவர் ஆடம் மொஸாரியும், கடந்த சில வாரங்களாக த்ரெட்ஸின் வெப் வெர்ஷனை நிறுவனத்திற்குள்ளேயே பயன்படுத்தி வருவதாகத் தெரிவித்திருக்கிறார். தொடக்கத்தில் சில வசதிகளை மட்டுமே கொண்டு அறிமுகப்படுத்தப்பட்ட த்ரெட்ஸில், தொடர்ந்து பல்வேறு வசதிகளை அறிமுகப்படுத்தி வருகிறது மெட்டா. அந்த வரிசையில் தற்போது இந்த வெப் வெர்ஷனும் அறிமுகப்படுத்தப்படவிருக்கிறது.

இன்ஸ்டாகிராம்

த்ரெட்ஸில் தொடர்ந்து குறைந்து வரும் பயனாளர் எண்ணிக்கை: 

கடந்த ஜூலை 5-ம் தேதி அறிமுகப்படுத்தப்பட்ட த்ரெட்ஸில் ஒரு வாரத்திற்குள்ளாகவே 100 மில்லியனுக்கு அதிகமாக பயனர்கள் இணைந்தனர். குறுகிய காலத்தில் அதிக பயனர்களைப் பெற்ற சமூக வலைத்தளம் என்ற சாதனையையும் படைத்தது த்ரெட்ஸ். ஆனால், புதுமையான மற்றும் தனித்துவமான வசதிகள் ஏதுமின்றி அதன் பயனாளர்களை இழக்கத் தொடங்கியது த்ரெட்ஸ். ஆகஸ்ட் 7 நிலவரப்படி தங்களுடைய மாதாந்திர பயனர் எண்ணிக்கையில் பெரும்பான்மையினரை இழந்து 10 மில்லியன் பயனாளர்களையே தற்போது கொண்டிருக்கிறது த்ரெட்ஸ். ஆனால், மறுபுறம் அதன் போட்டியாளரான ட்விட்டரோ 363.7 மில்லியன் மாதாந்திர பயனாளர்களையும், 237.8 மில்லியன் தினசரி பயனாளர்களையும் கொண்டிருப்பது குறிப்பிடத்தக்கது.