புதிய VR ஹெட்செட் குறித்த அறிவிப்பை வெளியிட்டது மெட்டா!
மெட்டா நிறுவனம் தங்களது அடுத்த தலைமுறை மிக்ஸ்டு ரியாலிட்டி ஹெட்செட்களான 'க்வெஸ்ட் 3' குறித்த அறிவிப்பை வெளியிட்டிருக்கிறது. 2022-ல் விற்பனை செய்யப்பட்ட 8.8 மில்லியன் மிக்ஸ்டு ரியாலிட்டி ஹெட்செட்களில் 80% விற்பனை, மெட்டாவின் க்வெஸ்ட் 2 மற்றும் க்வெஸ்ட் ப்ரோ சாதனங்களின் மூலம் வந்திருக்கிறது. வரும் ஜூன் 5-ம் தேதி தங்களது WWDC நிகழ்வை நடத்தவிருக்கிறது ஆப்பிள். இந்த நிகழ்வில் தங்களின் முதல் விர்சுவல் ரியாலிட்டி ஹெட்செட்டை ஆப்பிள் வெளியிடவிருப்பதாகத் தகவல் வெளியாகியிருக்கிறது. அதனைத் தொடர்ந்தே தற்போது தங்களின் க்வெஸ்ட் 3 ஹெட்செட் குறித்த அறிவிப்பை வெளியிட்டிருக்கிறது மெட்டா. தங்களது முந்தைய MR/VR ஹெட்செட்டை விட 40% மெல்லியதாகவும், சொகுசாகவும், இலகுவாகும் இந்த புதிய ஹெட்செட் இருக்கும் எனக் குறிப்பிட்டிருக்கிறது மெட்டா.
க்வெஸ்ட் 3-யின் விலை என்ன?
ஆப்பிள் தங்களின் புதிய ஹெட்செட்டை 3000 டாலர்கள் விலையில் (இந்திய மதிப்பில் ரூ.2.50 லட்சம்) வெளியிடலாம் என எதிர்பார்க்கப்படும் நிலையில், தங்களுடைய ஹெட்செட்டுக்கு 499 டாலர்கள் விலை நிர்ணயம் செய்திருக்கிறது மெட்டா. இந்த புதிய ஹெட்செட்டை க்வெஸ்ட் 2-வின் கேம்கள் மற்றும் அனுபவங்களுடனும் பயன்படுத்தலாம் எனக் தங்களுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இது குறித்த பதிவில் குறிப்பிட்டிருக்கிறது மெட்டா. இந்த ஹெட்செட் குறித்த மேலதிக தகவல்கள், வரும் செப்டம்பர் 27-ல் நடைபெறவிருக்கும் அந்நிறுவனத்தின் வருடாந்திர MR/VR நிகழ்வில் அறிவிக்கப்படும் எனத் தெரிவித்திருக்கிறது மெட்டா. மேலும், அதனையொட்டியே இந்த புதிய ஹெட்செட்டை அந்நிறுவனம் வெளியிடும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.