Page Loader
புதிய கேலக்ஸி Z ஃபிளிப் 6 மற்றும் கேலக்ஸி ரிங் குறித்த தகவல்கள் கசிந்தன 

புதிய கேலக்ஸி Z ஃபிளிப் 6 மற்றும் கேலக்ஸி ரிங் குறித்த தகவல்கள் கசிந்தன 

எழுதியவர் Sindhuja SM
May 29, 2024
05:47 pm

செய்தி முன்னோட்டம்

சாம்சங்கின் வரவிருக்கும் கேலக்ஸி Z ஃபிளிப் 6 அதன் முன்னோடியான ஃபிளிப் 5ஐ விட சற்று பெரிய பேட்டரியைக் கொண்டிருக்கும். MySmartPrice ஆல் கண்டுபிடிக்கப்பட்ட FCC சோதனைப் பதிவுகள் மூலம் இந்தத் தகவல் வெளியாகியுள்ளது. ஃபிளிப் 6இன் பேட்டரி 3,790mAh என மதிப்பிடப்பட்டுள்ளது, ஃபிளிப் 5க்கு 3,700mAh பேட்டரி திறன் வழங்கப்பட்ட நிலையில், ஃபிளிப் 6இன் பேட்டரி திறன் அதை விட மேம்பட்டதாக அறிமுகப்படுத்தப்பட உள்ளது. இதனிடையே, சாம்சங் 4,000mAh பேட்டரி திறனை சோதித்து வருவதாக கூறப்படுகிறது. கேலக்ஸி ரிங்கின் அளவு வரம்பு மற்றும் பேட்டரி திறன் பற்றிய தகவலும் வெளியாகி உள்ளன.

சாம்சங்

கேலக்ஸி ரிங் பரந்த அளவிலான அளவுகளுடன் வெளியாக உள்ளது

விரல்களில் அணிவிக்கக்கூடிய சாதனமான கேலக்ஸி ரிங் 5 முதல் 12 வரையிலான அளவுகளில் கிடைக்கும். பல்வேறு விரல் அளவுகளுக்கு பொருந்தக்கூடிய அளவில் இது வடிவமைக்கப்பட்டுள்ளது. இதன் அளவு வரம்பு Evie ரிங்கை போன்றது, ஆனால் இதன் மற்ற போட்டியாளர்களான ஓரா ரிங் ஜெனரல் 3(6 முதல் 13 அளவுகள்) மற்றும் அல்ட்ராஹுமன் ரிங் ஏர்(அளவுகள் 5 முதல் 14 வரை) ஆகியவற்றிலிருந்து இது வேறுபடுகிறது. கேலக்ஸி ரிங் மோதிரத்தின் பேட்டரி திறன் ரிங்கின் அளவைப் பொறுத்து, 17mAh முதல் 22mAh வரை இருக்கும். இது 15mAh முதல் 22mAh வரையிலான பேட்டரி திறனுடன் சமீபத்தில் வெளியாகிய ஓரா ரிங்குடன் ஒப்பிடத்தக்கது.