சந்தாதாரர்கள் எண்ணிக்கையில் தொடர் சரிவை சந்திக்கும் தனியார் தொலைத்தொடர்பு நிறுவனங்கள்; பிஎஸ்என்எல் விஸ்வரூப வளர்ச்சி
இந்தியாவின் முன்னணி டெலிகாம் ஆபரேட்டரான ரிலையன்ஸ் ஜியோ, செப்டம்பர் 2024 இல், 7.96 மில்லியன் வயர்லெஸ் பயனர்கள் அதன் நெட்வொர்க்கை விட்டு வெளியேறியதன் மூலம், தொடர்ந்து மூன்றாவது மாதமாக குறிப்பிடத்தக்க சந்தாதாரர் இழப்பைப் பதிவு செய்துள்ளது. மறுபுறம், ஏர்டெல் மற்றும் வோடபோன் ஐடியா ஆகியவையும் பெரும் சரிவைச் சந்தித்துள்ளன. ஏர்டெல் சுமார் 1.43 மில்லியன் சந்தாதாரர்களை இழந்துள்ளது மற்றும் வோடபோன் ஐடியா 1.55 மில்லியன் பயனர்களை இழந்துள்ளது என்று இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையத்தின் (டிராய்) தரவுகள் தெரிவிக்கின்றன. ஜியோவின் இழப்புகள் முந்தைய மாதங்களில் (அக்டோபர் 2024) காணப்பட்ட போக்கைத் தொடர்ந்து ஜூலையில் 0.75 மில்லியனாகவும் ஆகஸ்ட் மாதத்தில் 4.01 மில்லியனாகவும் சரிந்தன.
நிலையான வளர்ச்சியை பெற்று வரும் பிஎஸ்என்எல்
தனியார் தொலைத்தொடர்பு நிறுவனங்களுக்கு மாறாக, அரசுக்கு சொந்தமான பிஎஸ்என்எல் அதன் வளர்ச்சிப் பாதையை பராமரித்து, செப்டம்பர் மாதத்தில் 0.84 மில்லியன் வயர்லெஸ் சந்தாதாரர்களை சேர்த்தது. இந்த வளர்ச்சியானது ஜூலையில் 2.92 மில்லியனாகவும் ஆகஸ்ட் மாதத்தில் 2.53 மில்லியனாகவும் இருந்தது. இது ஒரு நிலையான மேல்நோக்கிய போக்கைக் காட்டுகிறது. செப்டம்பர் 30, 2024 நிலவரப்படி, ஜியோவின் வயர்லெஸ் சந்தாதாரர்களின் எண்ணிக்கை 463.78 மில்லியன், ஏர்டெல் 383.48 மில்லியன், வோடபோன் ஐடியா 212.45 மில்லியன், மற்றும் பிஎஸ்என்எல்/எம்டிஎன்எல் இணைந்து 93.8 மில்லியன் சந்தாதார்களைக் கொண்டுள்ளன. ஜியோ 40.20 சதவீத சந்தைப் பங்குடன் சந்தையில் முன்னணியில் உள்ளது. அதைத் தொடர்ந்து ஏர்டெல் 33.24 சதவீதமும், விஐ 18.41 சதவீதமும், பிஎஸ்என்எல்/எம்டிஎன்எல் 8.15 சதவீதமும் உள்ளது.