LOADING...
"ஹே ஜியோ" சொன்னா போதும்! போன் பேசும்போதே கார் புக் பண்ணலாம்! ரிலையன்ஸ் நிறுவனத்தின் மெகா ஏஐ புரட்சி
ரிலையன்ஸ் நிறுவனத்தின் மெகா ஏஐ புரட்சி

"ஹே ஜியோ" சொன்னா போதும்! போன் பேசும்போதே கார் புக் பண்ணலாம்! ரிலையன்ஸ் நிறுவனத்தின் மெகா ஏஐ புரட்சி

எழுதியவர் Sekar Chinnappan
Jun 19, 2026
06:42 pm

செய்தி முன்னோட்டம்

இந்தியாவின் முன்னணி தொலைத்தொடர்பு நிறுவனமான ரிலையன்ஸ் ஜியோ, தனது வாடிக்கையாளர்களின் மொபைல் பயன்பாட்டு அனுபவத்தை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்லும் நோக்கில் ஒரு புதிய தொழில்நுட்பப் புரட்சியை அறிவித்துள்ளது. ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் 49வது ஆண்டு பொதுக்குழு கூட்டத்தில், பயனர்களின் ஸ்மார்ட்போன்களிலேயே நேரடியாக செயல்படக்கூடிய பிரத்தியேக செயற்கை நுண்ணறிவு (ஏஐ) சேவைகள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. இதில் ஜியோ ஏஐ கால் ஏஜென்ட் மற்றும் முழுமையாக மாற்றியமைக்கப்பட்ட மைஜியோ ஏஐ செயலி ஆகியவை முதன்மை அம்சங்களாக இடம்பெற்றுள்ளன.

போன் கால்

போன் கால்களிலேயே உதவ வரும் ஜியோ கால் ஏஜென்ட்

பொதுவாக ஏஐ தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தத் தனித்தனி செயலிகளை நாட வேண்டியுள்ள நிலையில், ஜியோ நிறுவனம் இந்த ஏஐ வசதியைத் தனது நெட்வொர்க்கிலேயே நேரடியாக ஒருங்கிணைத்துள்ளது. பயனர்கள் சாதாரண போன் கால்களில் பேசிக் கொண்டிருக்கும் போது ஹே ஜியோ (Hey Jio) என்று கூறுவதன் மூலம் இந்த ஏஐ உதவியாளரை இயக்க முடியும். பயனரின் முழுமையான அனுமதியோடு மட்டுமே அழைப்பில் இணையும் இந்த ஏஐ ஏஜென்ட், தமிழ் உள்ளிட்ட பல இந்திய மொழிகளை ஆதரிக்கும் திறன் கொண்டதாக வடிவமைக்கப்பட்டுள்ளது.

நேரடி மொழிபெயர்ப்பு

நேரடி மொழிபெயர்ப்பு மற்றும் கால் சுருக்கம்

இந்த ஏஐ கால் ஏஜென்ட், நடக்கும் உரையாடல்களை உடனுக்குடன் உரை வடிவில் மாற்றியமைக்கும். குறிப்பாக, 10 நபர்கள் வரை பங்கேற்கும் ஒரு குரூப் காலில், யார் யார் என்ன பேசுகிறார்கள் என்பதைத் துல்லியமாக அடையாளம் கண்டு, அவரவர் விருப்பமான மொழிகளில் அதனைப் பதிவு செய்யும். அழைப்பு முடிவடைந்தவுடன், பேசப்பட்ட முக்கிய விவரங்கள், நினைவூட்டல்கள் மற்றும் அடுத்தகட்ட பணிகள் குறித்த சுருக்கமான அறிக்கையை உருவாக்கி, அதில் பங்கேற்ற அனைவருக்கும் தானாகவே பகிர்ந்து விடும்.

Advertisement

டிஜிட்டல் உதவியாளர்

அழைப்பின் போதே பணிகளை முடிக்கும் டிஜிட்டல் உதவியாளர்

வெறும் குறிப்புகளை எடுப்பதோடு நின்றுவிடாமல், பயனர்களுக்கான தினசரி வேலைகளையும் இந்த ஏஐ ஏஜென்ட் செய்து முடிக்கும். உதாரணத்திற்கு, ஒருவருடன் போனில் பேசிக் கொண்டிருக்கும் போதே, திரையை மாற்றாமல் "ஜியோ ஏஐ" மூலம் ஆன்லைனில் உணவு ஆர்டர் செய்யவோ, டாக்ஸி புக் செய்யவோ அல்லது உணவகங்களில் டேபிள் முன்பதிவு செய்யவோ முடியும். நடப்பு ஆண்டின் இறுதிக்கிற்குள் ஜியோவின் 50 கோடிக்கும் அதிகமான வாடிக்கையாளர்களுக்கு இந்த அதிநவீன சேவை முழுமையாகக் கிடைக்கவுள்ளது.

Advertisement

மைஜியோ செயலி

ஏஐ தொழில்நுட்பத்துடன் மாறும் மைஜியோ செயலி

இவற்றுடன், வாடிக்கையாளர்கள் ரீசார்ஜ் செய்யவும் கணக்கு விபரங்களை அறியவும் பயன்படுத்தி வந்த மைஜியோ செயலி, இனி ஒரு தனிநபர் ஏஐ ஆலோசகராக மாறவுள்ளது. பயனர்கள் செயலியில் உள்ள பல்வேறு மெனுக்களைத் தேட வேண்டிய அவசியமின்றி, தங்களுக்குத் தேவையானதை நேரடியாகக் கூறினாலே ஏஐ அதனைச் செய்து முடிக்கும். புதிய நகரங்களுக்கு மாறும் போது சேவைத் தேவைகளை நிர்வகிப்பது, சர்வதேசப் பயணங்களின் போது ரோமிங் பேக்குகளைப் பரிந்துரைப்பது மற்றும் இ-சிம் போன்ற சேவைகளுக்கான சுய-கேஒய்சி செயல்முறைகளை எளிதாக்குவது போன்ற பணிகளை இச்செயலி மேற்கொள்ளும்.

தரவு பாதுகாப்பு

வாடிக்கையாளர் தரவுப் பாதுகாப்பு மற்றும் தனியுரிமை விதிகள்

பயனர்களின் தனிப்பட்ட தரவுப் பாதுகாப்பு மற்றும் தனியுரிமைக்கு இந்த புதிய தொழில்நுட்பத்தில் முழு முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது. ஜியோவின் இந்த ஏஐ சேவைகள் அனைத்தும் பயனரின் வெளிப்படையான ஒப்புதலுக்குப் பிறகே அழைப்புகளில் செயல்படும். மேலும், கட்டணப் பரிவர்த்தனைகள் உள்ளடங்கிய அனைத்து நடவடிக்கைகளுக்கும் வாடிக்கையாளரின் கூடுதல் பாதுகாப்பு உறுதிப்படுத்தல் கட்டாயமாக்கப்பட்டு உள்ளதால், பாதுகாப்பான முறையில் இந்த மெய்நிகர் சேவைகளைப் பயன்படுத்த இயலும்.

Advertisement