ஆண்ட் குழுமத்தில் இருந்து தனது பிடியை தளர்க்க போகிறாரா ஜாக் மா?
இ-காமர்ஸ் நிறுவனமான அலிபாபாவை நிறுவிய ஜாக் மா, ஆண்ட் குழுவில் 50% க்கும் அதிகமான பங்கு வைத்திருக்கிறார். இதன் மூலம் அந்நிறுவனத்தின் பங்குகளை நேரடியாகவும், மறைமுகமாகவும், அவர் கட்டுப்பாட்டில் வைத்திருத்ததாக தெரிகிறது. ஆண்ட் குழுமத்தின் நிறுவனர், ஜாக் மா, அந்நிறுவனப் பங்குதாரர்களின் ஒழுங்குமுறை நடைமுறைக்கு பிறகு, நிறுவனத்தின் கட்டுப்பாட்டை விட்டு கொடுக்க போவதாக செய்திகள் தெரிவிக்கின்றன. இந்த ஒழுங்கு முறை நடவடிக்கை, ஜாக் மாவின் ஒப்புதலின் அடிப்படையிலேயே நடைபெறுவதாகவும் கூறப்படுகிறது. "ஒழுங்குமுறை நடைமுறைக்கு பிறகு, எந்த ஒரு பங்குதாரரும், தனியாகவோ அல்லது கூட்டாகவோ, ஆண்ட் குழுமத்தின் மீது கட்டுப்பாட்டை கொண்டிருக்க மாட்டார்கள்" என்று நிறுவனம் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது. ஆண்ட் குழுமம், அலி பே எனும் ஆன்லைன் பண பரிவர்த்தனை செயலியையும் நடத்துகிறது.
சீன அரசின் செயல்படுகளை விமர்சித்த ஜாக் மா
2 ஆண்டுகளுக்கு முன்னர், சீன அரசின் நிதி கொள்கையையும், அதன் நிதி அமைச்சரவையும் கடுமையாக விமர்சித்தார் ஜாக் மா. சீனாவின் பாரம்பரிய வங்கிகள் "அடகு கடை மனப்பான்மையைக்" கொண்டிருப்பதாக அவர் கருத்து தெரிவித்து இருந்தார். அதன் தொடர்ச்சியாக, சீன அதிகாரிகள், அந்த ஆண்டின் பிற்பகுதியில் நடைபெறவிருந்த, ஆண்ட் குழுமத்தின் 37 பில்லியன் டாலர் ஐபிஓவை, முக்கிய பிரச்சனைகளை மேற்கோள் காட்டி, கடைசி நேரத்தில் நிறுத்தினர். இது பழிவாங்கும் நடவடிக்கையாக கருதப்பட்டு, உலகெங்கிலும் பலவித கண்டனங்களைப் பெற்றது. அதனை தொடர்ந்து 3 மாதங்கள், ஜாக் மா வெளியுலகில் இருந்து தலைமறைவானார். பல நாட்களுக்கு பிறகு, அந்நிறுவனத்தின் விழா ஒன்றில் ஆன்லைனில் பங்கேற்ற ஜாக் மா, அன்று முதல் பொதுவெளியில் உரையாடுவதையும் தவிர்த்து வருகிறார்.