PSLV உருவாக்கத்தில் 50% பங்களிப்பைத் தனியார் நிறுவனங்களுக்கு வழங்க திட்டம்; இஸ்ரோ தலைவர் வி.நாராயணன் தகவல்
செய்தி முன்னோட்டம்
இந்திய விண்வெளி ஆய்வு மையமான இஸ்ரோ, அதன் மிக முக்கிய ராக்கெட்டான போலார் சாட்டிலைட் லாஞ்ச் வெஹிக்கிள் (PSLV) உருவாக்கத்தில் 50% பங்களிப்பை ஒரு தனியார் தொழில் கூட்டமைப்பிற்கு மாற்றத் திட்டமிட்டுள்ளதாக இஸ்ரோ தலைவர் வி.நாராயணன் வியாழக்கிழமை (நவம்பர் 6) அறிவித்தார். பெங்களூர் சர்வதேச கண்காட்சி மையத்தில் நடைபெற்ற 7வது இந்தியா உற்பத்தி கண்காட்சி (IMS 2025) நிகழ்வில் பேசிய அவர், உள்நாட்டு விண்வெளி, பாதுகாப்பு மற்றும் பொறியியல் துறைகளின் திறனைப் பாராட்டினார். தற்போது இஸ்ரோவின் பல்வேறு திட்டங்களுக்குத் தேவையான அமைப்புகளில் 80% முதல் 85% வரை இந்தியத் தொழில்துறையே வழங்குவதாகவும் அவர் குறிப்பிட்டார்.
எல்&டி
எல்&டியுடன் இணைந்து ராக்கெட் தயாரிப்பு
இந்தியத் தொழில் கூட்டமைப்பு (HAL மற்றும் L&T தலைமையில்) உருவாக்கிய முதல் PSLV ராக்கெட், இந்த நிதியாண்டின் இறுதிக்குள், பெரும்பாலும் பிப்ரவரிக்குள் விண்ணில் ஏவப்படும் என்று நாராயணன் தெரிவித்தார். இந்தத் தனியார் கூட்டமைப்பால் உருவாக்கப்படும் இரண்டு ஏவுதல்கள் வெற்றிகரமாக முடிந்தவுடன், PSLV உருவாக்கத்தில் 50% பொறுப்பு நேரடியாகத் தனியார் நிறுவனங்களிடம் ஒப்படைக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.
தனியார் துறை
தனியார் துறையின் மிகப்பெரிய பங்களிப்பு
இஸ்ரோ ஏவும் ஒவ்வொரு ராக்கெட்டிலும் 80% பங்களிப்பை இந்தியத் தொழில்துறையே அளிப்பதாகவும், சுமார் 450 தொழில்கள் இஸ்ரோவின் திட்டங்களுக்கு ஆதரவளிப்பதாகவும் நாராயணன் வலியுறுத்தினார். இஸ்ரோவின் சமீபத்திய பெரிய மைல்கற்களைப் பற்றிப் பேசிய அவர், ஆண்டுக்கு 10-12 ஆக உள்ள ஏவுதல்களின் எண்ணிக்கையை, அடுத்த ஐந்து ஆண்டுகளுக்குள் 50 ஆக உயர்த்த பிரதமர் மோடி இலக்கு நிர்ணயித்துள்ளார் என்றும் தெரிவித்தார். இதற்கிடையே, இஸ்ரோ தனது ஸ்மால் சேட்டிலைட் லாஞ்ச் வெஹிக்கிள் (SSLV) தொழில்நுட்பத்தை ரூ.511 கோடி ஒப்பந்தத்தின் மூலம் HALக்கு மாற்றியுள்ளதாகவும், 16 SSLV ராக்கெட்டுகளின் உற்பத்தியைத் தனியார் துறைக்கு மாற்றத் திட்டமிட்டுள்ளதாகவும் நாராயணன் தெரிவித்தார்.