சந்திரயான் 3 நிலவில் தரையிறங்கும் நிகழ்வை நேரலை செய்யவிருக்கும் இஸ்ரோ
கடந்த சில நாட்களுக்கு முன் சந்திரயான் 3-யின் ப்ரொபல்ஷன் மாடியூலில் இருந்து பிரிந்தது லேண்டர் மாடியூல். நிலவைத் தனியே சுற்றி வந்து கொண்டிருக்கும் லேண்டர் மாடியூலின் சுற்று வட்டப்பாதையின் உயரத்தைக் குறைக்கும், இரண்டாவது மற்றும் கடைசி டீபூஸ்டிங் நடவடிக்கையை நேற்று அதிகாலை வெற்றிகரமாக மேற்கொண்டது இஸ்ரோ. இத்துடன் தரையிறக்கத்திற்கு முன்பு மேற்கொள்ளப்பட வேண்டிய அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு முடிந்திருக்கும் நிலையில், நாளை மறுநாள் (ஆகஸ்ட் 23) மாலை நிலவில் தரையிறங்குவதற்கு ஆயத்தமாகி வருகிறது லேண்டர் மாடியூல். இந்நிலையில், இந்த தரையிறக்கம் எத்தனை மணிக்கு மேற்கொள்ளப்படவிருக்கிறது, நேரலையில் அதனைக் காண்பது எப்படி, என்பது குறித்த தகவல்களை தங்களுடைய எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்திருக்கிறது இஸ்ரோ.
நேரலை செய்யவிருக்கும் இஸ்ரோ:
எக்ஸ் தளத்தில் பதிவிடப்பட்டுள்ள இஸ்ரோ பதிவின் படி, ஆகஸ்ட் 23 அன்று இந்திய நேரப்படி மாலை 6.04 மணிக்கு லேண்டர் மாடியூலை நிலவில் தரையிறக்கத் திட்டமிட்டிருக்கிறது இஸ்ரோ. இந்த நிகழ்வை, இஸ்ரோவின் வலைத்தளப் பக்கம், யூடியூப் பக்கம் மற்றும் ஃபேஸ்புக் பக்கம் ஆகியவற்றில் நேரலையில் காண முடியும். அது மட்டுமின்றி, பொது மக்களும் இந்த நிகழ்வைக் கண்டுகளிக்க டிடி நேஷனல் தொலைக்காட்சியில் இதனை ஒளிபரப்பவும் திட்டமிட்டிருக்கின்றனர். ஆகஸ்ட் 23 மாலை, 5.27 மணிக்கு இந்த டிடி நேஷனல் தொலைக்காட்சியில் இந்த நேரலை தொடங்கும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், மாணவர்களிடம் விண்வெளி சார்ந்த ஆர்வத்தை உருவாக்க, ஒவ்வொரு பள்ளியும் தங்கள் பள்ளிகளில் இந்த நிகழ்வை நேரலை செய்ய வேண்டும் எனக் கேட்டுக் கொண்டிருக்கிறது இஸ்ரோ.