சந்திரயான் 4: நிலவின் தண்ணீரின் இருப்பை ஆய்வு செய்ய ஜப்பானுடன் கைகோர்க்கும் இந்தியா
சந்திரயான் 3 திட்டத்தின் மூலம் வெற்றிகரமாக நிலவில் கால் பதித்திருக்கிறது இஸ்ரோ. சந்திரயான் 3 திட்டத்தின் முதன்மையான நோக்கமே நிலவில் நம்மால் தரையிறங்க முடியும் என்பதை செயல்படுத்திக் காட்டுவது தான். அதனை வெற்றிகரமாகச் செய்து முடித்திருக்கிறது இஸ்ரோ. தற்போது அதனைத் தொடர்ந்து, சந்திரயான் 4க்கான பணிகள் ஏற்கனவே துவக்கப்பட்டுவிட்டன. ஆம், ஜப்பானுடன் இணைந்து தாங்கள் மேற்கொள்ளவிருக்கும் Lunar Polar Exploration Mission (Lupex) திட்டத்தையே சந்திரயான் 4 திட்டமாகச் செயல்படுத்தவிருக்கிறது இஸ்ரோ. நிலவின் தண்ணீரின் இருப்பு குறித்த தகவல்களை ஆய்வு செய்வதையே முதன்மையான குறிக்கோளாகக் கொண்டு இந்தத் திட்டத்தை வடிவமைக்கவிருக்கின்றன இஸ்ரோவும், ஜப்பானிய விண்வெளி ஆய்வு நிறுவனமான ஜாக்ஸாவும் (JAXA).
சந்திரயான் 4 திட்டம்: எப்போது செயல்படுத்தப்படவிருக்கிறது?
இந்தத் திட்டத்தின் மூலம், நிலவின் துருவப் பகுதியின் அருகில் இருக்கும் நிரந்தரமாக நிழல் படிந்திருக்கும் இடங்களில் ஆய்வுகளை மேற்கொள்ளவிருக்கின்ற இஸ்ரோவும், ஜாக்ஸாவும். இதற்கு முன்னர் நிலவில் தண்ணீர் இருப்பதாகக் கிடைத்த தகவல்கள் மற்றும் சந்திரயான் 3 மூலம் பெறும் தகவல்களையும் சந்திரயான் 4 திட்டத்திற்குப் பயன்படுத்தவிருக்கிறது இஸ்ரோ. நிலவின் தண்ணீரின் இருப்பைக் கண்டறிவது, பிற்காலத்தில் நிலவில் மனிதர்களை ஈடுபடுத்தும் திட்டங்களுக்கு மிகவும் உதவியாக இருப்பதோடு, பிற்கால விண்வெளி ஆய்வுகளையே மொத்தமாப் புரட்டிபோடும் வாய்ப்புகளும் இருக்கின்றன. சந்திரயான் 4 திட்டமானது 2026-ம் ஆண்டு ஜப்பானின் H3 ராக்கெட்டின் உதவியுடன் செயல்படுத்தப்படவிருக்கிறது. சந்திரயான் 4 திட்டமும் ஒரு லேண்டர் மற்றும் ஒரு ரோவரைக் கொண்ட திட்டமாகவே செயல்படுத்தப்படவிருக்கிறது.