இன்னும் சிறிது நேரத்தில் நிலவின் சுற்றுப்பாதைக்குள் நுழைகிறது சந்திரயான்-3
ஜூலை 14ஆம் தேதி இந்தியாவில் இருந்து விண்ணில் ஏவப்பட்ட சந்திரயான்-3 விண்கலம் இன்னும் சிறிது நேரத்தில், அதாவது இன்று இரவு 7 மணிக்கு நிலவின் சுற்றுப்பாதைக்குள் நுழைய இருக்கிறது. இந்தியாவின் இஸ்ரோ நிலவுக்கு அனுப்பும் மூன்றாவது விண்கலம் இதுவாகும். இன்று சந்திரயான்-3 நிலவின் சுற்றுப்பாதைக்குள் நுழைகிறது என்பது மிகப்பெரும் வரலாற்று நிகழ்வாகும். ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி மையத்தில் இருந்து ஜூலை 14, 2023 அன்று ஏவப்பட்ட சந்திரயான்-3 சந்திரனை நோக்கி சீரான பாதையில் சென்று கொண்டிருக்கிறது. இந்நிலையில், லூனார் ஆர்பிட் இன்செர்ஷன்(LOI) என்ற செயல்முறையை இன்று இஸ்ரோ நிகழ்த்த இருக்கிறது. நிலவை சுற்றியுள்ள சுற்றுப்பாதைக்குள் சந்திரயான்-3 விண்கலத்தை செலுத்துவதையே இஸ்ரோ இப்படி அழைக்கிறது.
பெங்களூரில் இருந்து சந்திரயானை இயக்க இருக்கும் விஞ்ஞானிகள்
இந்த செயல்முறை பெங்களூரில் உள்ள ISRO டெலிமெட்ரி, டிராக்கிங் மற்றும் கமாண்ட் நெட்வொர்க்கில்(ISTRAC) இருந்து நிகழ்த்தப்படும். சந்திர மேற்பரப்பில் ஒரு ரோவரை மென்மையாக தரை இறக்கி, 14 நாட்களுக்கு(1 சந்திர நாள்) அந்த ரோவரை நிலவின் மேற்பரப்பில் இயக்குவது தான் சந்திராயன்-3 திட்டத்தின் முக்கிய குறிக்கோளாகும். வெறும் 26 கிலோ எடை கொண்ட இந்த ரோவரில் கேமராக்கள், ஸ்பெக்ட்ரோமீட்டர்கள், நிலவின் மேற்பரப்பை ஆய்வு செய்வதற்கான ட்ரில்கள் உள்ளிட்ட அறிவியல் கருவிகள் பொருத்தப்பட்டுள்ளன. இந்த திட்டம் வெற்றிபெற்றால், அமெரிக்கா, ரஷ்யா, சீனா ஆகிய நாடுகளுக்கு அடுத்தபடியாக நிலவில் வெற்றிகரமாக தரை இறங்கிய நாடாக இந்தியாவும் கருதப்படும். இந்த விண்கலம் ஆகஸ்ட் 23, 2023அன்று மாலை 5.47 மணிக்கு நிலவில் தரையிறங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.