விக்ரம் லேண்டரைக் கொண்டு திட்டமிடப்படாத பரிசோதனை ஒன்றையும் வெற்றிகரமாகச் செயல்படுத்தியிருக்கும் இஸ்ரோ
கடந்த ஆகஸ்ட் 23ம் தேதி நிலவின் தென் துருவப் பகுதியில் வெற்றிகரமாகத் தரையிறங்கியது சந்திரயான் 3. இத்திட்டத்தின் வெற்றியின் மூலம், தென் துருவப் பகுதியில் தரையிறங்கிய முதல் நாடு என்ற பெயரையும், நிலவில் மென்தரையிறக்கத்தை சாத்தியப்படுத்திய நாடு என்ற பெயரையும் பெற்றது இந்தியா. 14 நாட்களுக்கு மட்டுமே திட்டமிடப்பட்டிருந்த இந்த திட்டமானது இறுதி நாட்களை நெருங்கிக் கொண்டிருக்கும் நிலையில், இத்திட்டத்தின் கீழ் அனுப்பப்பட்ட லேண்டர் மற்றும் ரோவர்கள் வெற்றிகரமாக தங்கள் செயல்பாடுகளை முடித்திருப்பதாகத் தெரிவித்திருக்கிறது இஸ்ரோ. சந்திரயான் 3 திட்டத்தின் மூலம் செய்ய வேண்டிய, பட்டியலிடப்பட்ட அனைத்து செயல்பாடுகளும் வெற்றிகரமாக முடிக்கப்பட்டிருக்கும் நிலையில், திட்டத்தில் இல்லாத புதிய செயல்பாடு ஒன்றையும், லேண்டரைக் கொண்டு வெற்றிகரமாகச் செயல்படுத்தியிருக்கிறது இஸ்ரோ.
நிலவில் மீண்டும் தரையிறங்கிய விக்ரம் லேண்டர்:
நிலவின் மேற்பரப்பில் நிலை கொண்டிருக்கும் லேண்டரின் இன்ஜின்களை மீண்டும் உயிர்ப்பித்து, சற்றுத் தள்ளி மீண்டும் தரையிறக்கியிருக்கிறது இஸ்ரோ. அதாவது, நிலவின் தரைப்பரப்பில் இருந்து இன்ஜின்களின் உதவியுடன் 40 செமீ உயரத்திற்கு உயர்ந்து, 40 செமீ தள்ளி மீண்டும் தரையிறங்கியிருக்கிறது விக்ரம் லேண்டர். அடுத்து வரும் ஆண்டுகளில், நிலவில் இருந்து சோதனை மாதிரிகளை பூமிக்குக் கொண்டு வரவும், நிலவிற்கு மனிதர்களை அனுப்பும் திட்டங்களையும் வைத்திருக்கிறது இஸ்ரோ. தற்போது மேற்கொள்ளப்பட்டிருக்கும் இந்த சோதனையானது, அத்திட்டங்களின் வெற்றிக்குக் கைகொடுக்கலாம் என எக்ஸ் தளத்தில் பதிவிட்டிருக்கிறது இஸ்ரோ. இந்தச் சிறிய பரிசோதனைக்குப் பிறகும், எந்த வித கோளாறுகளும் இன்றி விக்ரம் லேண்டர் ஆரோக்கியத்துடன் இருப்பதாகவும், அதன் அனைத்துக் கருவிகளும் சரியாகச் செயல்படுவதாகவும் பதிவிட்டிருக்கிறது இஸ்ரோ.