சந்திரயான் 3 திட்டத்தின் ப்ரொபல்ஷன் மாடியூலை பூமிக்கு திசை திருப்பியது இஸ்ரோ
சந்திரயான் 3 திட்டத்திற்குப் பயன்படுத்தப்பட்ட, நிலவைச் சுற்றி வந்து கொண்டிருந்த 'ப்ரொபல்ஷன் மாடியூலை' (PM), திசைதிருப்பு பூமியைச் சுற்றி வரச் செய்யும் நடவடிக்கையை வெற்றிகரமாக மேற்கொண்டதாக அறிவித்திருக்கிறது இஸ்ரோ. இது குறித்த தகவல்களை தங்களுடைய எக்ஸ் பக்கத்திலும் பகிர்ந்திருக்கிறது இந்திய விண்வெளி ஆராய்ச்சி அமைப்பு. கடந்த ஜூலை 14ம் தேதி விண்ணில் ஏவப்படும் ஆகஸ்ட் 23ம் தேதி நிலவின் தென்துருவப் பகுதியில் தரையிங்கிய சந்திரயான் 3 விண்கலமானது, ப்ரொபல்ஷன் மாடியூல் மற்றும் லேண்டர் மாடியூல் என இரு பகுதிகளாக உருவாக்கப்பட்டிருந்தது. லேண்டர் மாடியூலானது நிலவில் தரையிறங்கி ஒரு நிலவு நாள் வரை அறிவியல் பரிசோதனைகளை மேற்கொண்ட நிலையில், ப்ரொபல்ஷன் மாடியூலானது நிலவைச் சுற்றிய சுற்று வட்டப்பாதையில் சுற்றி வந்து கொண்டிருந்தது.
ப்ரொபல்ஷன் மாடியூலைக் கொண்டு புதிய திட்டம்:
சந்தியரான் 3 திட்டத்தில் பயன்படுத்தப்பட்ட ப்ரொபல்ஷன் மாடியூலின் முதன்மையான நோக்கமே, லேண்ட் மாடியூலை நிலவின் சுற்று வட்டப்பாதையில் சேர்ப்பது தான். அந்தப் பணி முடிந்தவுடன், ப்ரொபல்ஷன் மாடியூலில் பொருத்தப்பட்டிருந்த SHAPE (Spectro-polarimetry of HAbitable Planet Earth) உபகரணத்தைக் கொண்டும் சில தகவல்களை சேகரித்தது இஸ்ரோ. சந்திரயான் 3 திட்டத்தின் துல்லியமான செயல்பாடுகள் காரணமாக, ஒரு மாத கால செயல்பாட்டிற்குப் பின்னரும் ப்ரொபல்ஷன் மாடியூலில் 100 கிலோ வரையிலான எரிபொருள் மீதம் இருந்திருக்கிறது. எனவே, அதனைக் கொண்டு நிலவில் இருந்து மாதிரிகளை எடுத்து வரும் இஸ்ரோவின் எதிர்காலத் திட்டத்திற்கான சில ஒத்திகைகளையும், பரிசோதனைகளையும் செய்து பார்க்கத் திட்டமிட்டது இஸ்ரோ.
பூமியின் சுற்றுவட்டப்பாதையை அடைந்த PM:
அதனடிப்படையில் கடந்த அக்டோபர் 9ம் தேதியன்று, நிலவின் சுற்று வட்டப்பாதையில் இருந்து வெளியேறும் நடவடிக்கைகளை மேற்கொள்ளத் தொடங்கி, நவம்பர் 10ம் தேதியன்று நிலவின் புவியூர்ப்பு விசையில் இருந்து வெளியேறுவதற்கான உந்துவிசையைப் பெற்று வெளியேறியிருக்கிறது PM. அதனைத் தொடர்ந்து, தற்போது பூமியின் சுற்றுவட்டப்பாதையில் சுற்றிவந்து கொண்டிருக்கும் PMல் உள்ள SHAPE உபகரணத்தைக் கொண்டு பூமி குறித்த சில தகவல்களை சேகரிக்கத் திட்டமிட்டிருக்கிறது இஸ்ரோ. ப்ரொபல்ஷன் மாடியூலை பூமியின் சுற்றுவட்டப்பாதைக்கு திசை திருப்பியதன் மூலமாக, அது நிலவில் மோதி தேவையில்லாத விண்வெளிக் குப்பைகளை உருவாக்குவதைத் தவிர்த்திருப்பதாகத் தெரிவித்திருக்கிறது இந்திய விண்வெளி ஆய்வு அமைப்பு.