வெற்றிகரமாக நிலவில் தரையிறங்கியது சந்திரயான் 3
இஸ்ரோ விஞ்ஞானிகளின், இந்திய மக்களின் நான்கு ஆண்டுக் கனவு இன்று நிறைவேறியிருக்கிறது. விண்ணில் செலுத்தப்பட்டு 40 நாட்களுக்குப் பிறகு இன்று வெற்றிகரமாக நிலவில் தரையிறங்கியிருக்கிறது சந்திரயான் 3. கடந்த ஜூலை 14ம் தேதி விண்ணில் செலுத்தப்பட்ட சந்திரயான் 3 விண்கலம் 40 நாட்கள் பயணம் செய்து பல்வேறு கட்ட நடவடிக்கைகளைக் கடந்து வெற்றிகரமாக இன்று தரையிறங்கியிருக்கிறது. இறுதிக்கட்ட பரபரப்புகளுக்கு இடையிலும், திட்டமிட்டபடி சரியாக மாலை 5.44-க்குத் தொடங்கி, 6.04க்கு நிலவின் தென் துருவப் பகுதியில் தரையிங்கியிருக்கிறது சந்திரயான் 3. சந்திரயான் 3யின் விக்ரம் லேண்டர் வெற்றிகரமாகத் தரையிறங்கியதைத் தொடர்ந்து, பிரஞ்யான் ரோவரும் நிலவின் மேற்பரப்பில் இந்தியாவின் கால்தடைத்தைப் பதித்திருக்கிறது. இஸ்ரோவின் இந்த சாதனையைத் தொடர்ந்து பிரதமர் நரேந்திர மோடி விஞ்ஞானிகளுக்கு வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளார்.
வெற்றிகரமாகத் தரையிறங்கிய சந்திரயான் 3:
நான்கு நிலைகளாகப் பிரிக்கப்பட்டு நிலவின் தரையிறக்கம் தானியங்கி முறையில் மேற்கொள்ளப்பட்டது. முதல் மற்றும் இரண்டாம் நிலைகள் வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்ட நிலையில், பதற்றமான மூன்றாம் நிலை தொடங்கியது. சந்திரயான் 2 திட்டத்தின் போது, இந்த மூன்றாம் நிலையிலேயே லேண்டருடனான தொடர்பை இழந்து தோல்வியைடந்தது இஸ்ரோ. தற்போது அந்த நிலையில் எந்தப் பிரச்சினையும் இன்றி வெற்றிகரமாகத் தரையிறங்கியிருக்கிறது சந்திரயான் 3. ஒட்டுமொத்த தரையிறக்க நிகழ்விலும் எந்த விதமான தடங்களுக்கும் இன்றி நிலவின் தென் துருவப் பகுதியில் மென் தரையிறக்கத்தை சாத்தியப்படுத்தியிருக்கிரது இஸ்ரோ. நான்காவது நாடாக இந்த சாதனையை படைத்திருக்கிறது இந்தியா.
சந்திரயான் 3
பிரிக்ஸ் மாநாட்டில் கலந்து கொள்ள தென்னாபிரிக்கா சென்றுள்ள பிரதமர் மோடி, ஆன்லைன் மூலமாக விக்ரம் லேண்டர் தரையிறங்குவதை பார்த்து ரசித்தார். சந்திரயான்-3 தரையிங்கி இருக்கும் தென் துருவ பகுதியில் தான் 2009ஆம் ஆண்டு நிலவில் தண்ணீர் இருப்பதற்கான தடயங்கள் கிடைத்தன. 2009ஆம் ஆண்டு, சந்திரயான்-1இல் பொருத்தப்பட்டிருந்த நாசா கருவி தான் நிலவில் தண்ணீர் இருப்பதற்கான தடயங்களை கண்டுபிடித்தது என்பது குறிப்பிடத்தக்கது. அதனால், சந்திரயான்-3இன் இந்த மிகப்பெரிய வெற்றி, உலக விண்வெளி ஆராய்ச்சியை அடுத்த நிலைக்கு கூட்டி செல்லும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சந்திராயன்-3, கடந்த ஜூலை 14ஆம் தேதி LVM 3 ஹெவி-லிஃப்ட் ஏவுகணையின் உதவியுடன் விண்ணில் ஏவப்பட்டது. தற்போது வெற்றிகரமாக அனைத்துத் தடைகளையும் கடந்து நிலவில் கால்பதித்திருக்கிரது சந்திரயான் 3.