நிலவின் தென்துருவத்தை ஆராய இந்தியாவின் புதிய விண்வெளித் திட்டம்!
நிலவின் அதிகம் ஆராயப்படாத பகுதியை ஆராய்வதற்காக புதிய திட்டம் ஒன்றை செயல்படுத்தவிருக்கிறது இஸ்ரோ. பூமியைப் பார்த்திருக்கும் நிலவின் பகுதியில் தான் இதுவரை நடத்தப்பட்ட பெரும்பாலான ஆராய்ச்சிகள் நிகழ்ந்திருக்கின்றன. இதன் மறுபக்கத்தில் பெரிய அளவில் ஆராய்ச்சிகள் நடத்தப்பட்டதில்லை. 2019-ல் 'சங்அ-4' திட்டத்தின் மூலம் நிலவின் மறுபக்கம் தரையிறங்கி சாதனை படைத்தது சீனா. LUPEX என்ற விண்வெளித் திட்டத்தின் மூலம் நிலவின் மறுபக்கத்தை ஆராயத் திட்டமிட்டிருக்கிறது இந்தியா. இதற்காக ஜப்பானுடனும் கைகோர்த்திருக்கிறது இஸ்ரோ. திட்டம் செயல்படுத்தப்படும் என்று மட்டுமே தகவல்கள் வெளியாகியிருக்கும் நிலையில், எப்போது செயல்படுத்தப்படும் என இன்னும் திட்டமிட்டப்படவில்லை. LUPEX திட்டத்திற்கு முன்னாள், வரும் ஜூன் மாதம் சந்திராயன்-3-ஐ நிலவில் தரையிறக்கவிருக்கிறது இந்தியாவின் விண்வெளி ஆய்வு நிறுவனமான இஸ்ரோ.
LUPEX திட்டம்:
இந்தப் புதிய திட்டத்திற்கு ஜப்பானின் விண்வெளி ஆய்வு நிறுவனமான JAXA-வுடன் கைகோர்த்திருக்கிறது இஸ்ரோ. இதில் ஒரு ரோவர் மற்றும் லேண்டர் ஆகிய இரண்டு சாதனங்கள் ஜப்பானிய ராக்கெட் மூலம் நிலவில் தரையிறக்கப்படவிருக்கின்றன. லேண்டரை இஸ்ரோவும், ரோவரை ஜப்பானும் உருவாக்கவிருக்கின்றன. இந்தத் திட்டத்தின் பிரதான நோக்கமே நிலவின் தென் துருவப் பகுதிகளில் நீரின் இருப்பைக் கண்டறிவது தான். இது குறித்து விவாதிக்க சமீபத்தில் JAXA-வில் இருந்து ஒரு குழு, இஸ்ரோ விஞ்ஞானிகளை சந்திக்க வந்து சென்றிருக்கிறது. நிலவின் தென் துருவத்தில் தரையிறங்க எந்த இடத்தை தேர்வு செய்வது என்பது குறித்து அவர்கள் விவாதித்துள்ளதாகத் தெரிகிறது. இந்தத் திட்டம் செயல்படுத்தப்பட்ட இன்னும் சில ஆண்டுகள் ஆகலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.