இஸ்ரோவின் GSLV-F17 ராக்கெட் வெற்றி: EOS-05 புவி கண்காணிப்புச் செயற்கைக்கோளின் முக்கியத்துவம் அறிந்துகொள்வோம்
செய்தி முன்னோட்டம்
இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ), ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி மையத்தின் இரண்டாவது ஏவுதளத்திலிருந்து GSLV-F17 ராக்கெட் மூலம் EOS-05 செயற்கைக்கோளை செப்டம்பர் 4 அதிகாலை 2:55 மணிக்கு வெற்றிகரமாக விண்ணில் செலுத்தியுள்ளது. புதன்கிழமை இரவு 11:30 மணிக்கு தொடங்கிய 27 மணி நேர கவுண்ட்டவுன் முடிந்ததும், 51.7 மீட்டர் உயரமும், 420.5 டன் எடையும் கொண்ட 3 நிலைகளைக் கொண்ட ஜிஎஸ்எல்வி ராக்கெட் திட்டமிட்டபடி நள்ளிரவில் சீறிப்பாய்ந்தது. லேசான மழையையும் பொருட்படுத்தாமல் ஏராளமான பொதுமக்கள் இந்த வரலாற்று நிகழ்வைக் கண்டு களித்தனர். 2,367 கிலோ எடைகொண்ட இந்தச் செயற்கைக்கோள், புவி ஒத்திசைவு மாற்றச் சுற்றுப்பாதையில் (Sub-GTO) துல்லியமாக நிலைநிறுத்தப்பட்டது.
முக்கியத்துவம்
EOS-05 செயற்கைக்கோளின் முக்கியத்துவம்
வழக்கமான புவி கண்காணிப்புச் செயற்கைக்கோள்கள் தாழ்ந்த புவி சுற்றுப்பாதையில் (LEO) இயங்கும் நிலையில், EOS-05 பூமியிலிருந்து சுமார் 36,000 கி.மீ உயரத்தில் உள்ள புவி ஒத்திசைவு சுற்றுப்பாதையில் இருந்து செயல்படும்.
இதன் மூலம், பூமியின் சுழற்சி வேகத்திற்கு ஏற்ப செயல்பட்டு, இந்தியாவின் விவசாயம், நிலவமைப்பு மற்றும் பேரிடர் மேலாண்மைக்குப் பயன்படும் நிகழ்நேரப் படங்களை இடைவிடாது வழங்கும்.
ஜிஎஸ்எல்வி-எஃப்-17 என்பது இந்தியாவின் புவி ஒத்திசைவு செயற்கைக்கோள் ஏவு வாகனத்தின் 19வது ஏவுதலாகும். மூன்று நிலைகளைக் கொண்ட, 51.7 மீட்டர் நீளமுள்ள இந்த ராக்கெட்டின் மூன்றாவது நிலை கிரையோஜெனிக் வகையைச் சேர்ந்தது.
இதன் ஏவுதல் நிறை 420.5 டன் ஆகும். மேலும், 2,000 கிலோகிராமுக்கும் அதிகமான எடையுள்ள செயற்கைக்கோள், ராக்கெட்டின் மூக்குக் கூம்பில் பொருத்தப்பட்டுள்ளது.