சந்திரயான் 3 குறித்த மாபெரும் 'வினாடி வினா போட்டி', ரூ.1 லட்சம் பரிசு
முதல் முறையாக நிலவின் தென்துருவப் பகுதியில் இஸ்ரோவின் சந்திரயான் 3 திட்டத்தின் மூலம் தரையிறங்கியது இந்தியா. எனவே, சந்திரயான் 3 திட்டத்தைக் கௌரவிக்கும் விதமாக , இஸ்ரோவுடன் இணைந்து மாபெரும் வினாடி வினா போட்டி ஒன்றை ஏற்பாடு செய்திருக்கிறது மைகவ்இந்தியா (MyGovIndia) தளம். இந்தப் போட்டியில் இந்தியக் குடிமக்கள் யார் வேண்டுமானாலும் கலந்து கொள்ளலாம். இப்போட்டியில் ஆன்லைன் மூலம் பதிவு செய்து பொதுமக்கள் தாங்கள் இருக்கும் இடத்திலிருந்தே உடனடியாகக் கலந்து கொள்ள முடியும். இந்தப் போட்டிக்கென மைகவ்இந்தியா உருவாக்கியிருக்கும் இணையதளத்திற்குச் சென்று, நமது மொபைல் எண், பெயர் மற்றும் வீட்டு முகவரி ஆகிய விபரங்களைக் கொடுத்து இந்தப் போட்டியில் கலந்து கொள்ளலாம்.
ஒரு லட்சம் பரிசுத்தொகை:
மொத்தம் ஐந்து நிமிடங்கள், 10 கேள்விகள். ஐந்து நிமிடங்களில் பத்து கேள்விகளுக்கு சரியான விடையளிப்பவர்களுக்கு பரிசுத் தொகை வழங்கப்படும் என அந்தத் தளத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. கேள்விகள் அனைத்து சந்திரயான் 3 மற்றும் இஸ்ரோவின் நிலவத் திட்டங்கள் சார்ந்தவையாகவே இருக்கும். வெற்றி பெறுபவர்களுக்கு, முதல் பரிசாக ரூ.1 லட்சம், இரண்டாவது பரிசாக ரூ.75,000 மற்றும் மூன்றாவது பரிசாக ரூ.50,000 வழங்கவிருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. முதல் மூன்று இடங்களைத் தவிர்த்து, அடுத்த 100 இடங்களைப் பிடிப்பவர்களுக்கு தலா ரூ.2,000-மும், முதல் 100 இடங்களைக் கடந்து அடுத்த 200 இடங்களைப் பிடிப்பவர்களுக்கு ரூ.1000-மும் பரிசுத்தொகையாக வழங்கப்படவிருக்கிறது. போட்டியில் கலந்து கொள்ள விரும்புபவர்கள் இங்கே கிளிக் செய்து, போட்டி இணையதளத்திற்குச் சென்று 'Participate Now' பொத்தானைக் கிளிக் செய்து பங்கெடுக்கலாம்.