
பயனர்களின் தகவல்களை திருடுகிறதா ரியல்மீ.. ட்விட்டர் பயனரின் புகார்!
செய்தி முன்னோட்டம்
ரியல்மீ நிறுவனம் பயனர்களின் அனுமதியில்லாமல் அவர்களது ஸ்மார்ட்போனில் உள்ள தகவல்களை திருடுவதாக ஸ்மார்ட்போன் பயனர் ஒருவர் ட்விட்டரில் பதிவிட்டிருக்கிறார்.
ரியல்மீ நிறுவனத்தின் ஸ்மார்ட்போன்களானது Enhanced Intelligent Services என்ற வசதியுடனேயே வருகின்றன. இந்த வசதியானது பயனர்களின் கால் லாக், எஸ்எம்எஸ் மற்றும் இருப்பிடத் தகவல்களை சேமிப்பதாகக் குற்றம் சாட்டியிருக்கிறார் அவர்.
மேலும், இந்த வசதியானது நாம் மொபைல் வாங்கும் போதே ஆன் செய்தே கொடுக்கப்படுவதாகவும், இதனை ஆஃப் செய்யும் வசதி இருக்கிறது என்றும் குறிப்பிட்டிருக்கும் அவர், இது குறித்த விபரங்களை அந்நிறுவனம் தெரிவிப்பதில்லை என்றும் பதிவிட்டிருக்கிறார்.
ரியல்மீ
விசாரணை செய்யும் மத்திய அமைச்சகம்:
அந்த ட்விட்டர் பயனர், மேலும் தன்னுடைய பதிவில், "இந்த தகவல்கள் சீனாவிற்கு அனுப்பப்படுகிறதா?" எனக் கேள்வியெழுப்பியிருக்கிறார்.
ட்விட்டர் பயனரின் இந்த பதிவானது மத்திய தகவல் தொழில்நுட்பத்துறை துணை அமைச்சரின் கவனத்தையும் ஈர்த்திருக்கிறது. மேற்கூறிய பதிவரின் பதிவைக் குறிப்பிட்டு, இது குறித்து விசாரணை மேற்கொள்கிறோம் எனப் பதிவிட்டிருக்கிறார் அவர்.
இது குறித்து செய்தி நிறுவனத்துடன் தங்களது கருத்தைப் பகிர்ந்து கொண்டிருக்கிறது ரியல்மீ நிறுவனம்.
அதில், 'பயனர்களின் தனியுரிமைக்கு நாங்கள் மிகுந்த மதிப்பளிக்கிறோம். Enhanced Intelligent Services வசதியானது, பயனர்களின் பயன்பாட்டு அனுபவத்தை அதிகரிப்பதற்காகப் பயன்படுத்தப்படுவது. நாங்கள் எந்தத் தகவலையும் சேகரிப்பது இல்லை' எனத் தெரிவித்திருக்கிறது ரியல்மீ.
ட்விட்டர் அஞ்சல்
Twitter Post
Will hv this tested and checked @rishibagree
— Rajeev Chandrasekhar 🇮🇳 (@Rajeev_GoI) June 16, 2023
copy: @GoI_MeitY https://t.co/4hkA5YWsIg