கூகுள் பே மூலம் மேற்கொள்ளப்படும் யுபிஐ பரிவர்த்தனைக்கு சேவைக் கட்டணம் வசூலிக்கும் கூகுள்?
உலகளவில் இந்தியாவை முன்னணி டிஜிட்டல் பணப்பரிவர்த்தை மையாமாக மாற்றிய பெருமை யுபிஐ-யையே சேரும். இலவசமாக மொபைல் மூலமே வங்கி முதல் வங்கி வரையிலான டிஜிட்டல் பணப்பரிவர்த்தனையை சாத்தியமாக்கியது யுபிஐ. இதனைத் தொடர்ந்து இந்தியாவில் உள்ள அனைத்து ஸ்மார்ட்போன் பயனாளர்களும் யுபிஐ வசதியைப் பயன்படுத்தத் தொடங்கினர். இந்தியாவில் போன்பே, கூகுள்பே மற்றும் பேடிஎம் உள்ளிட்ட நிறுவனங்கள் யுபிஐ வசதியினை தங்களது சேவையின் மூலம் அளித்து வருகின்றன. யுபிஐ மூலம் டிஜிட்டல் பணப்பரிவர்த்தனை மேற்கொள்வதற்கு எந்த விதமான கட்டணமும் கிடையாது என்பதே, அதனை மக்கள் அனைவரும் பயன்படுத்துவதற்கான முக்கிய காரணமாக அமைந்தது. ஆனால், விரைவில் யுபிஐ பயன்பாட்டிற்கு நாம் கட்டணம் செலுத்த வேண்டிய நிலை ஏற்படும் வாய்ப்புகள் இருக்கின்றன.
யுபிஐ பணப்பரிவர்த்தனைக்கு சேவைக் கட்டணம் வசூலித்த கூகுள்:
யுபிஐ மூலம் மேற்கொள்ளப்படும் எந்த வகையான பணப்பரிவர்த்தனைக்கும் இதுவரை கட்டண சேவை நிறுவனங்கள் எந்த வித கட்டணத்தையும் வசூலிக்கவில்லை. ஆனால், சமீப காலமாக குறிப்பிட்ட பயனாளர்களிடம் தங்களது தளத்தில் (கூகுள் பே) மொபைல் ரீசார்ஜ் செய்வதற்கு கட்டணமாக ரூ.1 முதல் ரூ.3 வரை கூகுள் வசூலித்திருப்பதாகத் தகவல் வெளியாகியிருக்கிறது. மேலும், இந்த கட்டணம் தொடர்பாக தங்களது விதிமுறைகளிலும் சில மாற்றங்களை மேற்கொண்டிருக்கிறது கூகுள். அதன்படி, குறிப்பிட்ட வகையான பயன்பாடுகளுக்கு மட்டும் பயனாளர்கள் சேவைக் கட்டணம் செலுத்தி வேண்டியிருக்கலாம் எனவும், அப்படி செலுத்த வேண்டியிருக்கும் பட்சத்தில் அது முன்பே பயனாளர்களுக்கு தெரிவிக்கப்படும் எனவும் குறிப்பிடப்பட்டிருக்கிறது. மொபைல் ரீசார்ஜ் மட்டுமின்றி இனி வரும் காலங்களில் பிற பரிவர்த்தனைகளுக்கும் அத்தளம் சேவைக் கட்டணம் வசூலிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.