
வெரிஃபைடு பயனாளர்களின் பதிவுகளுக்கு தனிப் பக்கம் அளிக்கும் இன்ஸ்டாகிராம்
செய்தி முன்னோட்டம்
உலகளவில் பல கோடி மக்களால் பயன்படுத்தப்படும் சமூக வலைத்தளமான இன்ஸ்டாகிராம் கட்டண சேவை பயனாளர்களை முன்னிறுத்தி புதிய வசதி ஒன்றை அறிமுகப்படுத்தத் திட்டமிட்டு வருகிறது.
வெரிஃபைடு பேட்ஜை கட்டணம் செலுத்திப் பெற்றுக் கொள்ளலாம் என எக்ஸ் அறிவித்ததைப் போலவே, மெட்டாவும் கட்டணம் செலுத்தி வெரிஃபைடு பேட்ஜைப் பெறும் வகையில் மெட்டா வெரிஃபைடு முறையை அறிமுகப்படுத்தி தற்போது அது செயல்பாட்டிலும் இருக்கிறது.
இந்தியாவில் மாதம் ரூ.699 செலுத்தி ஆண்ட்ராய்டு மற்றும் IOS வாடிக்கையாளர்கள் மெட்டாவின் இந்த வெரிஃபைடு பேட்ஜைப் பெற முடியும். முன்னதாக இந்த வசதியை பிரபலமானவர்களுக்கு மட்டும் இலவசமாக வழங்கி வந்தது மெட்டா.
இன்ஸ்டாகிராம்
வெரிஃபைடு பயனாளர்களின் பதிவுகளுக்கு தனிப்பக்கம்:
தற்போது இன்ஸ்டாகிராம் செயலியில் நம்முடைய முகப்புப் பக்கத்தைத் தவிர்த்து, நாம் பின்தொடர்பவர்களின் பதிவுகளை மட்டும் காணும் வகையிலான பக்கம் ஒன்றும், நமக்கு பிடித்தமான கணக்குகளின் பதிவுகளை மட்டும் பார்க்கும் வகையிலான பக்கம் ஒன்றும் வழங்கப்பட்டு வருகிறது.
இன்ஸ்டாகிராம் செயலியின் மேலே உள்ள இன்ஸ்டாகிராம் லோகோவை கிளிக் செய்து மேற்கூறிய பக்கங்களை நாம் அணுக முடியும்.
தற்போது அந்தப் பட்டியலில் கூடுதலாக, வெரிஃபைடு பயனாளர்களின் பதிவுகளை மட்டும் கொண்ட பக்கம் ஒன்றையும் கூடுதலாக வழங்கத் திட்டமிட்டு வருகிறது இன்ஸ்டாகிராம்.
கட்டணம் செலுத்திய பயனாளர்களின் பதிவுகள் அதிக பயனாளர்களை சென்றடைய உதவும் வகையில் இந்த வசதியை இன்ஸ்டாகிராம் அறிமுகப்படுத்தவிருப்பதாகக் கூறப்படுகிறது.