ஸ்னாப்சாட்டின் ஸ்னாப் அம்சத்தை இன்ஸ்டாகிராமில் சேர்க்க திட்டம்; சோதனை ஓட்டம் தொடக்கம்
மெட்டா நிறுவனத்திற்கு சொந்தமான சமூக ஊடக தளமான இன்ஸ்டாகிராம், ஸ்னாப்சாட்டின் ஸ்னாப் வரைபடத்தை பிரதிபலிக்கும் புதிய அம்சத்தை தனது தளத்திலும் சேர்ப்பதற்கான சோதனைகளைத் தொடங்கியுள்ளது. 2017இல் ஸ்னாப்சாட் அறிமுகப்படுத்திய இந்த புதுமையான அம்சம், பயனர்கள் தங்கள் இருப்பிடத்தின் அடிப்படையில் வரைபடத்தில் உரை மற்றும் வீடியோ புதுப்பிப்புகளை பதிவிட அனுமதிக்கிறது. இந்த வரைபடத்தை பயனர்கள் தங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளலாம். இதனால் அவர்களின் புதுப்பிக்கப்படும் பதிவுகள் ஒருவருக்கொருவர் தோன்றும். இதை இன்ஸ்டாகிராம் தனது தளத்தில் முயசிக்கும் நிலையில், இரண்டிற்கும் அடிப்படையான வேறுபாடாக அவற்றின் தனியுரிமை அமைப்பு உள்ளதாக இன்ஸ்டாகிராம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வரையறுக்கப்பட்ட சோதனை மற்றும் பயனர் கட்டுப்பாடு
தற்போது, இன்ஸ்டாகிராம் இந்த வரைபட அம்சத்தை தேர்ந்தெடுக்கப்பட்ட சில சந்தைகளில் சிறிய சோதனைக்கு உட்படுத்தியுள்ளது. மெட்டாவின் (இன்ஸ்டாகிராமின் தாய் நிறுவனம்) செய்தித் தொடர்பாளர் கிறிஸ்டின் பை, தி வெர்ஜிடம் அளித்த பேட்டியில், பயனர்கள் தங்கள் இருப்பிடத்தைப் பகிர்ந்து கொள்ள "குறிப்பிட்ட நபர்களின் குழுவை" தேர்வு செய்ய வேண்டும் என்று கூறினார். இதில் பயனர்களின் நெருங்கிய நண்பர்கள் அல்லது அவர்கள் பின்தொடர்பவர்கள் மட்டுமே இடம்பெற முடியும் எனத் தெரிவித்துள்ளார். "எப்போதும் போல, பாதுகாப்பை மனதில் கொண்டு இந்த அம்சத்தை உருவாக்குகிறோம்" என்று பை மேலும் கூறினார். இருப்பினும், தி வெர்ஜ் படி, முழு பொதுப் பகிர்வு வழங்கப்படுமா அல்லது பதிவுகள் எவ்வளவு காலம் தெரியும் என்பது பற்றிய கூடுதல் விவரங்களை அவர் வழங்கவில்லை.