Loading...
சீனாவை ஓரங்கட்டும் இந்திய ஸ்டார்ட்அப்! காந்தம் இல்லாமலேயே இயங்கும் அதிநவீன இவி மோட்டார்
சீனாவுக்கு செக் வைத்த இந்திய ஸ்டார்ட்அப்

சீனாவை ஓரங்கட்டும் இந்திய ஸ்டார்ட்அப்! காந்தம் இல்லாமலேயே இயங்கும் அதிநவீன இவி மோட்டார்

எழுதியவர் Sekar Chinnappan
Jul 13, 2026
06:10 pm

செய்தி முன்னோட்டம்

எலக்ட்ரிக் வாகனங்களின் மிக முக்கிய அங்கமாக விளங்குவது அதன் மோட்டார்கள் ஆகும். இந்த மோட்டார்களைத் தயாரிக்கப் பயன்படும் நியோடைமியம் போன்ற அரிய வகை தாதுக்கள் மற்றும் காந்தங்களின் உலகளாவிய விநியோகச் சங்கிலியில் 90 சதவீதத்திற்கும் மேல் சீனா மட்டுமே தன்வசம் வைத்து ஆதிக்கம் செலுத்தி வருகிறது. இதனால் ஏற்படும் விநியோகச் சிக்கல்களுக்கும், சீனாவின் ஏகபோகத்திற்கும் முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், பெங்களூரை சேர்ந்த விமாக் லேப்ஸ் என்ற இந்திய ஸ்டார்ட்அப் நிறுவனம் காந்தமே இல்லாத அதிநவீன இவி மோட்டார்களை உருவாக்கி அசத்தியுள்ளது.

லாக்டவுனில் உதித்த யோசனை 

லாக்டவுன் சிக்கலில் உதித்த 'காந்தமில்லா' மோட்டார் யோசனை

கடந்த 2020 ஆம் ஆண்டு கொரோனா முதல் அலையின் போது, வோக்ஸ்வாகன் மற்றும் ஃபோர்டு போன்ற முன்னணி நிறுவனங்களில் உற்பத்திப் பிரிவை அமைத்த அனுபவமிக்க, விமாக் லேப்ஸ் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி மனிஷ் சேத், தனது மோட்டார் புரோட்டோடைப்பிற்கான காந்தங்கள் ஷாங்காய் துறைமுகத்தில் 3 மாதங்கள் முடங்கியதால் பெரும் நஷ்டத்தை சந்தித்தார்.

இந்தத் தடையை ஒரு வாய்ப்பாக மாற்றிய அவர், வெளிநாட்டு காந்தங்களை சார்ந்திருக்காத ஒரு புதிய தொழில்நுட்பத்தை உருவாக்கத் திட்டமிட்டார்.

அதன் விளைவாக உருவானதுதான் இந்த முற்றிலும் காந்தம் மற்றும் அரிய தாதுக்கள் இல்லாத மோட்டார் தளம்.

மென்பொருள்

மென்பொருளால் இயங்கும் 'சாஃப்ட்வேர் டிஃபைன்ட் மேக்னட்'

சந்தையில் ஏற்கனவே இருக்கும் காந்தமில்லா மோட்டார்கள் அதிக எடையும், குறைந்த செயல்திறனும் கொண்டவையாக இருக்கின்றன.

ஆனால், விமாக் லேப்ஸ் நிறுவனம் மோட்டாரின் ரோட்டாரில் இருந்து காந்தங்களை முழுமையாக நீக்கிவிட்டு, அதற்குப் பதிலாக சாதாரண காப்பர் சுருள்கள் மற்றும் எஃகு அமைப்பை நிருவியுள்ளது.

பேட்டரியில் இருந்து வரும் மின்சாரம் பாயும்போது, நிறுவனத்தின் பிரத்யேக அல்காரிதம்கள் மற்றும் ஃபார்ம்வேர் (Firmware) மூலமாக காப்பர் சுருள்களுக்குள் வயர்லெஸ் முறையில் காந்தப்புலத்தை உருவாக்குகிறது.

இந்த 'சாஃப்ட்வேர் டிஃபைன்ட் மேக்னட்' (Software-Defined Magnet) தொழில்நுட்பம், சாதாரண காந்த மோட்டார்களை விட கூடுதல் மைலேஜ் மற்றும் செயல்திறனை வழங்குகிறது.

ADVERTISEMENT

செயல்திறன் மேம்பாடு

ஓடிஏ (OTA) அப்டேட் மூலம் மேம்படும் மோட்டார் செயல்திறன்

பாரம்பரிய இவி மோட்டார்களில் உள்ள காந்தங்கள் வெப்பம் அல்லது பழமையாவதன் காரணமாகத் தங்களது காந்தத்தன்மையை இழந்துவிட்டால் மோட்டாரையே மாற்ற வேண்டியிருக்கும்.

ஆனால், விமாக் லேப்ஸின் விர்ச்சுவல் மேக்னட் சிங்க்ரோனஸ் மோட்டார் (VMSM) தொழில்நுட்பத்தில், காந்தப்புலம் மென்பொருளால் கட்டுப்படுத்தப்படுவதால், காந்தத்தன்மை இழப்பு என்ற பேச்சுக்கே இடமில்லை.

மேலும், மொபைல் போன்களைப் போலவே ஓவர்-தி-ஏர் (OTA) சாஃப்ட்வேர் அப்டேட்கள் மூலமாக, மோட்டாரின் உதிரிபாகங்களை மாற்றாமலேயே அதன் செயல்திறனைத் தொடர்ந்து மேம்படுத்த முடியும் என்பது இதன் தனிச்சிறப்பாகும்.

ADVERTISEMENT

விநியோக பாதுகாப்பு

இந்தியாவின் சுற்றுச்சூழல் மற்றும் விநியோகச் சங்கிலிப் பாதுகாப்பு

அரிய வகை தாதுக்களை சுத்திகரிக்கும் போது 'தோரியம்' போன்ற கதிரியக்கக் கழிவுகள் உருவாவதால், பெரும்பாலான நாடுகள் இதன் உற்பத்தியை சீனாவிற்கு வழங்குகின்றன.

இந்தியாவில் தாதுக்கள் இருந்தாலும், அதை சுத்திகரிக்கும் ஈக்கோசிஸ்டத்தை உருவாக்க 15 ஆண்டுகள் வரை ஆகும் என மனிஷ் சேத் குறிப்பிடுகிறார்.

விமாக் லேப்ஸின் மோட்டார்கள் சாதாரண காப்பர் மற்றும் எஃகு கொண்டு உருவாக்கப்படுவதால், இந்திய செமிகண்டக்டர் திட்டத்தின் உதவியுடன் 100 சதவீதம் இந்தியாவிற்குள்ளேயே இதை உற்பத்தி செய்ய முடியும்.

தற்பொழுது இந்நிறுவனம் அக்செல் நிறுவனத்திடமிருந்து 5 மில்லியன் டாலர் முதலீட்டைப் பெற்றுள்ளதுடன், இந்தியாவின் டாப் இவி தயாரிப்பு நிறுவனங்களுடன் இணைந்து கள சோதனைகளையும் மேற்கொண்டு வருகிறது.

அடுத்த இலக்கு

அடுத்தகட்ட இலக்காக அமையவுள்ள பிரத்யேக ஏசிக் (ASIC) சிப்கள்

தற்பொழுது சந்தையில் கிடைக்கும் மைக்ரோகண்ட்ரோலர்கள் அனைத்தும் காந்த மோட்டாரை இயக்கவே வடிவமைக்கப்பட்டுள்ளன.

இதற்கு மாற்றாக, விமாக் லேப்ஸ் நிறுவனம் தனது சொந்த ஏசிக் (ASIC) சிப்களை வடிவமைக்கத் திட்டமிட்டுள்ளது.

இதன் மூலம் மோட்டார் மின்னணு பாகங்களின் உற்பத்திச் செலவு 90 சதவீதம் வரை குறையும் என மதிப்பிடப்பட்டுள்ளது.

மேலும், கனரக லாரிகள், பேருந்துகள் மற்றும் பாதுகாப்புத் துறையின் தேவைகளுக்கான மோட்டார்களை உருவாக்கவும், இது குறித்து மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்துடன் பேச்சுவார்த்தை நடத்தவும் இந்நிறுவனம் திட்டமிட்டுள்ளது.

இஸ்ரோவின் குறைந்த செலவிலான உயர்தர கண்டுபிடிப்பு மாதிரியைப் பின்பற்றி, உலகளாவிய டீப்-டெக் சந்தையில் இந்தியாவை முன்னிறுத்துவதே தங்களது நோக்கம் என்று விமாக் லேப்ஸ் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

ADVERTISEMENT