அறிவியல் ஒலிம்பியாடில் இந்தியா சாதனை! 4 தங்கம், 1 வெள்ளிப் பதக்கம் வென்று இந்திய மாணவர்கள் அபாரம்
செய்தி முன்னோட்டம்
வியட்நாம் தலைநகர் ஹனோயில் செப்டம்பர் 25 முதல் அக்டோபர் 5 வரை நடைபெற்ற 19-வது சர்வதேச வானியல் மற்றும் விண்வெளி இயற்பியல் ஒலிம்பியாட் போட்டியில் இந்திய அணி 4 தங்கம் மற்றும் 1 வெள்ளிப் பதக்கங்களை வென்று சாதனை படைத்துள்ளது. போட்டியில் பங்கேற்ற ஐந்து இந்திய மாணவர்களும் பதக்கங்களை வென்று நாட்டிற்குப் பெருமை சேர்த்துள்ளனர். 64 நாடுகளை சேர்ந்த 307 மாணவர்கள் பங்கேற்ற இப்போட்டியில் 4 தங்கப் பதக்கங்களுடன் இந்தியா, வியட்நாம் நாட்டுடன் இணைந்து 3-வது இடத்தைப் பிடித்துள்ளது.
இந்திய மாணவர்கள்
பதக்கம் வென்ற இந்திய மாணவர்கள் மற்றும் பதக்கப் பட்டியல் விவரங்கள்
இப்போட்டியில் இந்தியாவின் பிரஞ்சல் தீட்சித் (ஹைதராபாத்), சுமந்த் குப்தா (டெல்லி), அக்சத் ஸ்ரீவஸ்தவா (குருகிராம்) மற்றும் அர்ணவ் செஹ்ராவத் (பரிதாபாத்) ஆகிய நான்கு மாணவர்கள் தங்கப் பதக்கங்களைக் கைப்பற்றினர்.
வதோதராவை சேர்ந்த ஹர்ஷில் அமித்குமார் படேல் வெள்ளிப் பதக்கம் வென்றார்.
தலா 5 தங்கப் பதக்கங்களை வென்ற ஈரான் மற்றும் தென் கொரிய நாடுகள் முதல் இரண்டு இடங்களைப் பிடித்தன.
மும்பை டிஐஎப்ஆர் பேராசிரியர் பாஸ்வதி முகர்ஜி மற்றும் பெங்களூரு ஐஐஏ பேராசிரியர் சன்வேத் கோலேகர் ஆகியோர் இந்திய அணியை வழிநடத்தினர்.
1989
1989-க்கு பிறகு இந்திய அறிவியல் ஒலிம்பியாடில் புதிய வரலாற்று மைல்கல்
இந்த ஆண்டு நடைபெற்ற கணிதம், இயற்பியல், வேதியியல், உயிரியல் மற்றும் வானியல் ஆகிய ஐந்து சர்வதேச அறிவியல் ஒலிம்பியாட் போட்டிகளும் நிறைவடைந்துள்ளன.
இதில் பங்கேற்ற 24 இந்திய மாணவர்களும் 16 தங்கம் மற்றும் 8 வெள்ளிப் பதக்கங்களைக் கைப்பற்றியுள்ளனர்.
இந்தியா 1989-இல் சர்வதேச ஒலிம்பியாட் போட்டிகளில் பங்கேற்கத் தொடங்கியதில் இருந்து, பங்கேற்ற அனைத்து இந்திய மாணவர்களும் வெறும் தங்கம் அல்லது வெள்ளிப் பதக்கங்களை மட்டுமே வென்று முழுமையான வெற்றி சாதனை படைப்பது இதுவே முதல் முறையாகும்.
பயிற்சி
ஹோமி பாபா அறிவியல் கல்வி மையத்தின் பயிற்சிப் பங்களிப்பு
இந்திய மாணவர்களை இப்போட்டிகளுக்குத் தேர்வு செய்து பயிற்சி அளிக்கும் ஹோமி பாபா அறிவியல் கல்வி மையத்தின் தரவுகளின்படி, 1999-இல் இந்தியா வானியல் ஒலிம்பியாடில் பங்கேற்கத் தொடங்கியதிலிருந்து 49% தங்கமும், 35% வெள்ளியும், 13% வெண்கலப் பதக்கங்களையும் வென்றுள்ளது.
குறிப்பாகக் கடந்த 5 ஆண்டுகளில் பங்கேற்ற அனைத்து இந்திய மாணவர்களும் 64% தங்கமும், 36% வெள்ளிப் பதக்கங்களையும் வென்றுள்ளனர்.
சர்வதேச அறிவியல் ஒலிம்பியாட் வரலாற்றில் இந்தியாவின் இந்த சாதனை ஒரு முக்கிய மைல்கல்லாகப் பார்க்கப்படுகிறது.