2023: தொழில் நுட்ப நிறுவனங்கள் மீதான ஒழுங்குமுறை நடவடிக்கையை தீவிரப்படுத்த போகும் இந்தியா
தொழில்நுட்ப நிறுவனங்கள் மீதான ஒழுங்கு முறை நடவடிக்கைகளை, இந்தியா மேலும் தீவிரப்படுத்தவிருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன. இணைய உபயோகத்தில், உலகில் இரண்டாவது இடத்தில், இந்தியா இருக்கிறது. அதனால், நாட்டின் இறையாண்மையை காக்கும் பொருட்டு, வெளிநாட்டு தொழில்நுட்ப நிறுவனங்கள், குறிப்பாக அமெரிக்க நிறுவனங்கள் மீதான நடவடிக்கையை அதிகப்படுத்த, அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது. அரசாங்கத்திற்கும், அமெரிக்கா தொழில்நுட்ப நிறுவனங்களுக்கும் இடையேயான நடவடிக்கை, ஐரோப்பாவின் கடுமையான நம்பிக்கையற்ற அணுகுமுறை மற்றும் சீன-பாணி அரசாங்க கண்காணிப்பு இரண்டையும் அடிப்படியாக கொண்டு, 2023ல் மேலும் தீவிரமடையும். இதன் தொடர்ச்சியாக, சில சட்டங்களை இந்தியா அரசு அறிமுகப்படுத்த போகிறது. சென்ற ஆண்டு, டிசம்பரின் பிற்பகுதியில், இந்திய நாடாளுமன்றக் குழு, டெக் நிறுவனங்களின் நடைமுறைகளை ஒழுங்குபடுத்தும், 'டிஜிட்டல் காம்ப்பெடிஷன்' சட்டத்தை அரசாங்கத்திற்கு பரிந்துரைத்தது.
இந்தியாவின் ஒழுங்குமுறை நடவடிக்கை
இந்த சட்டத்தின் மூலம், தங்களின் சொந்த உள் பிராண்டுகளை முன்னுரிமையாக விளம்பரப்படுத்துவது, மூன்றாம் தரப்பு கட்டண முறைகளை தடுப்பது, போன்ற நடவடிக்கைகளை தடை செய்யும். அத்துடன் கட்டாய அதிகப்படியான தள்ளுபடி மற்றும் பிரத்தியேகமான கூட்டாண்மைகள் போன்ற நடைமுறைகளைத் தடை செய்கிறது. இணைய நிறுவனங்களின் மீதான அரசாங்கத்தின் கண்கணிப்பை அதிகரிக்கும் புதிய தொலைத்தொடர்புச் சட்டத்தையும், மத்திய அரசு திட்டமிட்டு வருகிறது. இந்தச் சட்டம், பல பழமையான சட்டங்களுக்கு மாற்றாகவும், அனைத்து விதமான தொழில்நுட்ப செயலிகளுக்கும், உரிமங்களை முன்மொழிகிறது. இந்தியாவின் இந்த அணுகுமுறை, பெரும் நிறுவனங்களான மெட்டா மற்றும் ஆல்பாபெட் போன்ற தொழில்நுட்ப ஜாம்பவான்களுக்கு கவலையை உண்டாக்கலாம். இந்தியாவின் நடவடிக்கைகள், மற்ற பெரிய வளர்ந்து வரும் இணைய சந்தைகளுக்கு ஒரு உதாரணமாக மாறக்கூடும்.