LOADING...
டெல்லியில் மோசமடையும் காற்றின் தரம்: இந்தியாவின் முதல் அணியக்கூடிய Air purifier-க்கு மவுசு அதிகரிப்பு
இந்தியாவின் முதல் அணியக்கூடிய Air purifier அட்டோவியோ பெப்பிள்

டெல்லியில் மோசமடையும் காற்றின் தரம்: இந்தியாவின் முதல் அணியக்கூடிய Air purifier-க்கு மவுசு அதிகரிப்பு

எழுதியவர் Venkatalakshmi V
Nov 14, 2025
12:27 pm

செய்தி முன்னோட்டம்

டெல்லி மற்றும் தேசிய தலைநகர் பிராந்தியத்தில் (NCR) காற்றின் தரம் "மிகவும் மோசமான" (Severe) மண்டலத்தில் நீடிப்பதால், இந்தியாவின் முதல் அணியக்கூடிய (Wearable) தனிப்பட்ட காற்று சுத்திகரிப்பானான 'அட்டோவியோ பெப்பிள்' (Atovio Pebble)-க்கு மக்கள் மத்தியில் தேவை அதிகரித்துள்ளது. குருகிராமில் உள்ள ஒரு ஸ்டார்ட்அப் நிறுவனத்தால் கடந்த டிசம்பரில் அறிமுகப்படுத்தப்பட்ட இந்தச் சிறிய, பதக்கம் போன்ற சாதனம், கழுத்தில் அணியும்படி வடிவமைக்கப்பட்டுள்ளது. இதுவரை சுமார் 15,000 சாதனங்கள் விற்கப்பட்டுள்ளன. கடந்த ஒரு மாதத்தில் மட்டும் டெல்லி மற்றும் அதை சுற்றியுள்ள நகரங்களில் விற்பனை 30-35% அதிகரித்துள்ளது.

தொழில்நுட்பம்

தொழில்நுட்பம் மற்றும் சோதனை முடிவுகள்

இந்தச் சாதனம் PM2.5, PM10, பாக்டீரியாக்கள் மற்றும் வைரஸ்கள் போன்ற மாசுபடுத்திகளை நடுநிலையாக்க, "மேம்பட்ட மாறுபடும் அயன் தொழில்நுட்பத்தை" (Advanced Variable Anion Technology) பயன்படுத்துகிறது. AQI 200-ஐத் தாண்டும் நாட்களுக்காக இதில் "டர்போ மோட்" (Turbo mode) உள்ளது. ஐ.ஐ.டி. கான்பூரில் நடத்தப்பட்ட சோதனைகளில், இந்தச் சாதனம் ஒருவரின் சுவாச மண்டலத்தில் உள்ள மாசுபடுத்திகளைக் கிட்டத்தட்ட 43.8% வரை குறைப்பதாகத் தெரியவந்துள்ளது. இது காற்று சுழற்சி இல்லாத இடங்களிலும் சுத்தமான சுவாசச் சூழலை உருவாக்குகிறது.

எச்சரிக்கை

நிபுணர்களின் எச்சரிக்கை

எனினும் நுரையீரல் மருத்துவர்கள் மற்றும் விஞ்ஞானிகள் இந்தச் சாதனத்தின் செயல்திறன் குறித்து எச்சரிக்கை விடுக்கின்றனர். இந்தச் சாதனம் வெறும் 40% வரை மட்டுமே நுண் துகள்களைக் குறைப்பதால், இது ஒரு சாதாரண மூன்று-அடுக்கு (Three-ply) மாஸ்க்குக்கு இணையானது மட்டுமே என்று நிபுணர்கள் கூறுகின்றனர். கட்டுப்பாடான சூழலில் நடத்தப்பட்ட சோதனைகளைச் சுட்டிக்காட்டி, நுரையீரல் மருத்துவர்கள், அணிவதற்கு சௌகரியமாக இல்லாவிட்டாலும், N95 அல்லது N99 போன்ற தரச்சான்றிதழ் பெற்ற மாஸ்க்குகளை அணிவதுதான் நச்சுக்காற்றுக்கு எதிரான மிகச் சிறந்த மற்றும் நிரூபிக்கப்பட்ட பாதுகாப்பு நடவடிக்கை என்று வலியுறுத்தியுள்ளனர்.