வெனிசுலா நிலநடுக்கத்தை முன்கூட்டியே எச்சரித்த கூகுள்! உங்கள் ஆண்ட்ராய்டு மொபைலில் இருக்கும் அந்த ரகசிய தொழில்நுட்பம்!
செய்தி முன்னோட்டம்
வெனிசுலாவில் கடந்த ஒரு நூற்றாண்டில் இல்லாத அளவிற்கு அண்மையில் ஏற்பட்ட 7.1 மற்றும் 7.5 ரிக்டர் இரட்டை நிலநடுக்கங்கள் பெரும் பேரழிவை ஏற்படுத்தின. ஆனால், இந்த பயங்கர நிலநடுக்கத்தின் அலைகள் தங்களைத் தாக்குவதற்கு சில நொடிகள் முன்பாகவே, தங்களது ஆண்ட்ராய்டு மொபைலுக்கு கூகுள் நிறுவனத்திடமிருந்து நிலநடுக்க எச்சரிக்கை அறிவிப்பு வந்ததாக பல பயனர்கள் எக்ஸ் தளத்தில் ஸ்கிரீன்ஷாட்களுடன் பகிர்ந்து ஆச்சரியமடைந்துள்ளனர். நிலநடுக்கம் எப்போது வரும் என்று துல்லியமாகக் கணிக்க முடியாத சூழலில், கூகுள் நிறுவனம் இதனை எப்படி முன்கூட்டியே கண்டறிந்து எச்சரித்தது என்ற சுவாரசியமான பின்னணி தற்பொழுது வெளிவந்துள்ளது.
மினி நிலநடுக்கமானி
உங்கள் பாக்கெட்டில் இருக்கும் மினி நிலநடுக்கமானி
ஒவ்வொரு நவீன ஸ்மார்ட்போனிலும் அக்ஸிலரோமீட்டர் என்ற மிக முக்கிய சென்சார் பொருத்தப்பட்டுள்ளது. பொதுவாக நாம் மொபைலைத் திருப்பும்போது ஸ்கிரீன் தானாக மாறுவதற்கு இதுதான் உதவுகிறது. ஆனால், இதன் மற்றொரு வியக்கத்தக்கப் பயன்பாடு என்னவென்றால், இதனால் மிகச்சிறிய அளவிலான அதிர்வுகளையும் துல்லியமாகக் கண்டறிய முடியும். நிலநடுக்கம் ஏற்படும் போது உருவாகும் ஆரம்பகட்ட அதிர்வுகளை இந்த சென்சார் கண்டறிந்த அடுத்த நொடி, அந்த சிக்னலை அருகிலுள்ள தோராயமான இருப்பிட விவரத்துடன் கூகுளின் ஆண்ட்ராய்டு நிலநடுக்க எச்சரிக்கை அமைப்பிற்கு அனுப்பி விடுகிறது.
ஒளியின் வேகம்
ஒளியின் வேகத்தில் செயல்படும் கூகுளின் நெட்வொர்க்
உலகெங்கிலும் 2 பில்லியனுக்கும் அதிகமான ஆண்ட்ராய்டு போன்கள் இந்த எச்சரிக்கை நெட்வொர்க்கில் இணைந்துள்ளதால், இதுவே உலகின் மிகப்பெரிய விநியோகிக்கப்பட்ட நிலநடுக்கக் கண்டறியும் அமைப்பாகக் கருதப்படுகிறது. ஒரு குறிப்பிட்ட பகுதியில் உள்ள ஒரு மொபைலில் இருந்து அதிர்வு சிக்னல் வந்தவுடன், கூகுளின் சர்வர்கள் அந்தப் பகுதியில் உள்ள மற்ற ஆண்ட்ராய்டு போன்களையும் உடனடியாகக் கண்காணிக்கும். ஒரே நேரத்தில் நூற்றுக்கணக்கான போன்களில் இருந்து ஒரே மாதிரியான அதிர்வு சிக்னல்கள் வரும்போது, அங்கு நிலநடுக்கம் ஏற்படுவதைக் கூகுள் சர்வர்கள் நொடிப் பொழுதில் உறுதி செய்து, ஆபத்தான அலைகள் பரவுவதற்குள் அந்தப் பகுதி மக்களுக்கு அலர்ட் அனுப்பி விடுகிறது.
நிலநடுக்க அலைகளின் வேகம்
நிலநடுக்க அலைகளை விட மொபைல் சிக்னல் எப்படி முந்துகிறது?
நிலநடுக்கம் என்பது ஒரே ஒரு அதிர்வு அல்ல. அது முதன்மை அலைகள் (பி-அலைகள்), இரண்டாம் நிலை அலைகள் (எஸ்-அலைகள்) எனப் பிரிந்தே பயணிக்கிறது. இதில் பி-அலைகள் விநாடிக்கு 6 கிமீ வேகத்தில் மிக வேகமாகப் பயணிக்கும் ஆனால் இதனால் பெரிய பாதிப்பு இருக்காது. அதிக அழிவை ஏற்படுத்தும் எஸ்-அலைகள் விநாடிக்கு 3 முதல் 4 கிமீ வேகத்தில்தான் பின்னாடியே வரும். உங்கள் போன் பி-அலைகளைக் கண்டறிந்தவுடன், அந்த சிக்னல் ஒளியின் வேகத்தில் (விநாடிக்கு 2,99,792 கிமீ) கூகுள் சர்வருக்குப் பாய்ந்து விடுகிறது. நிலநடுக்கத்தின் வேகம் ஒளியின் வேகத்தை விட மிகக் குறைவு என்பதால், வெனிசுலா சம்பவத்தில், ஆபத்தான எஸ்-அலைகள் மக்களைத் தாக்குவதற்கு சில நொடிகள் முன்பே கூகுள் அலர்ட் மக்களை சென்றடைந்து விட்டது.
ஆண்ட்ராய்டு
ஆண்ட்ராய்டின் இரண்டு முக்கிய அலர்ட்டுகள் மற்றும் பாதுகாப்பு வழிகள்
கூகுள் நிறுவனம் நிலநடுக்கத்தின் தீவிரத்தைப் பொறுத்து இரண்டு வகையான எச்சரிக்கைகளை வழங்குகிறது. லேசான அதிர்வுகளுக்கு 'பீ அவேர் அலர்ட்' (Be Aware Alert) மூலம் எச்சரிக்கும் கூகுள், கடுமையான பாதிப்பை ஏற்படுத்தும் நிலநடுக்கங்களுக்கு 'டேக் ஆக்ஷன் அலர்ட்' (Take Action Alert) என்ற உரத்த சத்தத்துடன் கூடிய எச்சரிக்கையைத் திரையில் காண்பிக்கும். இந்த எச்சரிக்கையைத் தொடுவதன் மூலம், நிலநடுக்கத்தின் போது மேசைக்கு அடியில் தஞ்சமடைவது போன்ற எளிய பாதுகாப்பு வழிமுறைகளையும், நிலநடுக்கத்தின் மையப்புள்ளி மற்றும் தீவிரத்தைக் காட்டும் விரிவான வரைபடத்தையும் பயனர்கள் உடனடியாகத் தெரிந்து கொள்ள முடியும். இந்தியாவில் 2023 ஆம் ஆண்டு முதல் இந்த சேவை ஆண்ட்ராய்டு 5 மற்றும் அதற்கு மேற்பட்ட போன்களில் பயன்பாட்டில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.