யுபிஐ கடன் வசதி அளிக்கும் எச்டிஎஃப்சி மற்றும் ஐசிஐசிஐ வங்கிகள்
யுபிஐ வசதியை அறிமுகப்படுத்தியதன் மூலம், இந்தியாவின் நிதி சேவையில் புதிய டிஜிட்டல் புரட்சியையே உருவாக்கியது இந்திய அரசு. பணப்பரிவர்த்தனை சேவையாக தொடங்கப்பட்ட யுபிஐ சேவையை, புதிய அறிமுகங்களுடன் தற்போது அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் சென்று கொண்டிருக்கிறது NPCI. ரூபே கிரெடிட் கார்டுகளைக் கொண்டு யுபிஐ பரிவர்த்தனை மேற்கொள்ளும் வசதி, இணையம் செயல்படாத போதும் பயன்படுத்தும் வகையில் யுபிஐ லைட் வசதி எனப் பல்வேறு புதிய வசதிகள் யுபிஐ சேவையில் அறிமுகப்படுத்தப்பட்ட நிலையில், மேலும் ஒரு புதிய சேவையும் பயன்பாட்டில் இருக்கிறது. நம் வங்கிக் கணக்கில் பணமே இல்லையென்றாலும், கடனாக யுபிஐ பணப்பரிவர்த்தனை மூலமே பணம் செலுத்தும் வசதியையும் அறிமுகப்படுத்தியிருக்கிறது NPCI. இரண்டு வங்கிகள் மட்டும் தற்போது அந்த சேவையை வழங்கி வருகின்றன.
யுபிஐ பணப்பரிவர்த்தனைக் கடன்:
யுபிஐ பயனாளர்களுக்கு அதன் வங்கிகள் கடன் வழங்குவதற்கு சமீபத்தில் அனுமதியளித்தது ரிசர்வ் வங்கி. முன் அனுமதியளிக்கப்பட்ட இந்தக் கடன்களைக் கொண்டு, பயனர்கள் யுபிஐ பரிவர்த்தனை மேற்கொள்ள முடியும். பின்னர் குறிப்பிட்ட தேதிக்குள் அந்தக் கடனைச் செலுத்தி விட வேண்டும். கிட்டத்தட்ட, கிரெடிட் கார்டு மற்றும் பே லேட்டர் வசதியுடன் மறுவடிவம் தான் இந்த யுபிஐ கடன் வசதியும். தற்போது எச்டிஎஃப்சி மற்றும் ஐசிஐசிஐ ஆகிய இரு வங்கிகள் மட்டும் தங்கள் வாடிக்கையாளர்களுக்கு இந்த வசதியை அளித்து வருகின்றன. இந்த சேவையை தொடங்குவதற்கு ரூ.199 வாடிக்கையாளர்களிடம் பெறுகிறது எச்டிஎஃப்சி. ஆனால், ஐசிஐசிஐ அதுபோல தொடக்கக் கட்டணம் எதுவும் வசூலிப்பதில்லை. இரு வங்கிகளும் தங்களது வாடிக்கையாளர்களுக்கு ரூ.50,000 வரையிலான யுபிஐ கடன்களை அளிக்கின்றன.