146 ஒளி ஆண்டுகள் தொலைவில் மற்றுமொரு பூமி கண்டுபிடிப்பு! ஆனால் வெப்பநிலை -70 டிகிரி செல்சியஸ்
செய்தி முன்னோட்டம்
பூமியில் இருந்து சுமார் 146 ஒளி ஆண்டுகள் தொலைவில், நம் பூமியைப் போன்றே அளவு கொண்ட புதிய கிரகம் ஒன்றை சர்வதேச விஞ்ஞானிகள் குழு கண்டறிந்துள்ளனர். HD 137010 b என்று பெயரிடப்பட்டுள்ள இந்த கிரகம், அதன் சூரியனைப் போன்ற ஒரு நட்சத்திரத்தைச் சுற்றி வருகிறது. இது பூமியை விட வெறும் 6 சதவீதம் மட்டுமே பெரியது என்பது குறிப்பிடத்தக்கது. ஆஸ்திரேலியா, இங்கிலாந்து மற்றும் அமெரிக்க விஞ்ஞானிகள் இணைந்து நாசாவின் கெப்லர் விண்வெளித் தொலைநோக்கி மூலம் இந்த கிரகத்தைக் கண்டறிந்துள்ளனர். பூமியில் ஒரு ஆண்டுக்கு 365 நாட்கள் என்பது போல, இந்த கிரகத்தில் ஒரு ஆண்டு என்பது 355 நாட்கள் ஆகும்.
உயிர்கள்
உயிர்கள் வாழ்வதற்கான சூழல்
இந்தக் கிரகம் அதன் நட்சத்திரத்தைச் சுற்றி வரும் தூரத்தைக் கணக்கிடும்போது, அங்கே உயிர் வாழத் தேவையான சூழல் இருப்பதற்கு 50 சதவீத வாய்ப்புகள் உள்ளதாக ஆராய்ச்சியாளர் செல்சியா ஹுவாங் தெரிவித்துள்ளார். ஆனால், இந்த கிரகம் சுற்றி வரும் நட்சத்திரம் நமது சூரியனை விடக் குளிர்ச்சியானது. இதனால் இந்த கிரகத்தின் மேற்பரப்பு வெப்பநிலை -70 டிகிரி செல்சியஸ் வரை இருக்கலாம். இது செவ்வாய் கிரகத்தின் தட்பவெப்ப நிலையை ஒத்து இருக்கும்.
பின்னணி
சுவாரஸ்ய பின்னணி
இந்தக் கண்டுபிடிப்பின் பின்னணியில் ஒரு சுவாரசியமான கதை உள்ளது. இந்த கிரகத்தின் முதல் சமிக்ஞையை டாக்டர் அலெக்சாண்டர் வென்னர் என்பவர் தனது பள்ளிப் பருவத்திலேயே 'பிளானட் ஹண்டர்ஸ்' என்ற திட்டத்தின் மூலம் கண்டறிந்தார். பின்னர் அவர் அதே துறையில் முனைவர் பட்டம் பெற்று, தற்போது இந்தக் கண்டுபிடிப்பை உறுதி செய்த ஆய்வுக் கட்டுரையின் முதன்மை ஆசிரியராகவும் உள்ளார். தற்போதுள்ள தொழில்நுட்பத்தின்படி நாம் இந்த கிரகத்திற்குச் செல்ல நினைத்தால், பல பத்தாயிரம் ஆண்டுகள் ஆகும். இருப்பினும், அடுத்த தலைமுறைத் தொலைநோக்கிகள் மூலம் இந்த கிரகத்தில் நீர் இருக்கிறதா அல்லது அது ஒரு பெரிய பனிப்பந்து போன்ற கிரகமா என்பதை விரிவாக ஆராய முடியும் என்று வானியற்பியல் வல்லுநர் சாரா வெப் தெரிவித்துள்ளார்.