AI வசதியுடன் கூடிய புதிய தேடுபொறி.. என்ன செய்கிறது கூகுள்?
செய்தி முன்னோட்டம்
கூகுளின் பிரதான சேவையே தேடுபொறி (Search Engine) சேவை தான்.
இது வரை மைக்ரோசாப்டின் பிங் (Microsoft's Bing) தேடுபொறியை மற்றொரு சேவையாக மட்டுமே பார்த்து வந்த பயனர்கள், ஓப்பன்ஏஐ-யின் சாட்ஜிபிடி-யுடன் இணைந்த பிங் தேடுபொறி வசதி அறிமுகப்படுத்தப்பட்ட பிறகு, கூகுளுக்கு மாற்றாக அதனைப் பார்க்கத் தொடங்கினர்.
தங்கள் சாதனங்களில் மைக்ரோசாட்டின் பிங்கை பிரதான தேடுபொறி சேவையாக அளிக்க பரிசீலித்து வருவதாக கடந்த மாதம் தெரிவித்திருந்தது சாம்சங் நிறுவனம். இது கூகுளுக்கு ஒலித்த எச்சரிக்கை மணியாக இருந்திருக்க வேண்டும்.
தற்போது, செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பத்துடன் இணைந்த தேடுபொறியை வழங்கும் முனைப்பில் இருக்கிறது கூகுள். இதற்காக 160 பேர் கொண்ட குழு ஒன்று இரவு பகலாக வேலை பார்த்து வருகிறதாம்.
செயற்கை நுண்ணறிவு
மேம்படுத்தப்படும் கூகுள் தேடுபொறி:
'புராஜக்ட் மகி' என்ற பெயரில் AIதொழில்நுடப் வசதிகளுடன் கூடிய தேடுபொறி சேவையை வடிவமைத்து வருகிறது கூகுள்.
இந்த புதிய வசதியின் மூலம் தனிப்பட்ட பயனர் அனுபவத்தை வழங்க அந்நிறுவனம் முயற்சி செய்து வருகிறது.
மேலும், கோடிங் குறித்த கேள்விகளுக்கான தகவல்களை வழங்குவது மற்றும் பயனர்களின் கோரிக்கைக்கு ஏற்ப தானே கோடிங் செய்து வழங்குவது உள்ளிட்ட வசதிகளையும், புதிய AI-யுடன் கூடிய தேடுபொறியில் வழங்க கூகுள் முயற்சி செய்து வருவதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
மே மாதம் 10-ம் தேதி, கூகுளின் வருடாந்திர I/O நிகழ்வு நடைபெறவிருக்கிறது. அந்த நிகழ்வில், இந்த புதிய தேடுபொறி குறித்த அறிவிப்பை கூகுள் வெளியிடலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. அமெரிக்கா பயனர்களுக்கு மட்டுமே முதலில் வெளியிடத் திட்டமிட்டிருக்கிறது கூகுள்.