நெட்ஃபிலிக்ஸூக்கு பிரத்தியேக சலுகை வழங்கிய கூகுள்.. ஒப்புக் கொண்ட கூகுளின் செய்தித் தொடர்பாளர்
கூகுளின் பிளே ஸ்டோர் கட்டண முறை தொடர்பாக அமெரிக்காவைச் சேர்ந்த எபிக் மற்றும் கூகுள் இடையே அமெரிக்காவில் வழக்கு நடைபெற்று வருகிறது. அந்த வழக்கில் முக்கிய திருப்புமுனையாக, நெட்ஃபிலிக்ஸ் தளத்திற்கு கூகுள் நிறுவனம் சலுகை அளிக்க முன்வந்தது தெரியவந்திருக்கிறது. தங்களுடைய பிளே ஸ்டோரில் பட்டியலிடப்பட்டிருக்கும் செயலிகளில் மேற்கொள்ளப்படும் கட்டணங்களை தங்களுடைய சேவையின் மூலமாகவே மேற்கொள்ள வேண்டும் என்பதை கட்டாயமாக வைத்திருக்கிறது அந்நிறுவனம். மேலும், அந்த சேவைக்கு பரிவர்த்தனையில் 30% வரை கட்டணமாகவும் கூகுள் பெற்றுக் கொள்கிறது. இதனை எதிர்த்து நீதிமன்றத்தில் எபிக் நிறுவனம் 2020ம் ஆண்டு வழக்கு தொடர்ந்து அது நடைபெற்று வருகிறது.
நெட்ஃபிலிக்ஸ் நிறுவனத்துக்கு சலுகை:
இந்நிலையில், நெட்ஃபிலிக்ஸ் நிறுவனத்துக்கு மட்டும் 10% கட்டணமாக செலுத்தினால் போதும் என 2017ம் ஆண்டு கூகுள் நிறுவனம் சலுகை அளிக்க முன்வந்ததாத 2022ம் ஆண்டு நீதிமன்றத்தில் நெட்ஃபிலிக்ஸின் துணைத்தலைவர் பால் பெர்ரிமன் தெரிவித்திருக்கும் காணொளி தற்போதைய வழக்கில் பயன்படுத்தப்பட்டிருக்கிறது. தங்களுடைய சொந்த கட்டண முறையைப் பயன்படுத்துவதற்து கூகுளுக்கு 3%-மும், கூகுளின் கட்டண சேவையைப் பயன்படுத்துவதற்கு 15%-மும் செலுத்தியதாகத் தெரிவித்திருக்கிறார் அவர். மேலும், தங்களுடைய கட்டணை முறையைத் தவிர்த்துவிட்டு, கூகுளின் கட்டண முறையை மட்டும் பயன்படுத்துவதற்காக 10% மட்டும் செலுத்தினால் போதும் என கூகுள் சலுகை அளித்ததாகக் குறிப்பிட்டிருக்கிறார் அவர்.
கூகுளின் சலுகையை மறுத்த நெட்ஃபிலிக்ஸ்:
பின்னர் அதுவும் கூகுளின் வருவாயைப் பெருமளவு பாதிக்கும் என்பதைத் தொடர்ந்து, அந்த சலுகையை மறுத்து வலைத்தளத்தின் மூலமாக தங்களது கட்டண முறையை மட்டும் தற்போது பயன்படுத்தி வருகிறது நெட்ஃபிலிக்ஸ். ஒவ்வொரு பிரிவின் வணிகத்தின் தன்மைக்கேற்ப கட்டண கட்டமைப்பை கூகுள் வழங்குவது வழக்கம் தான் என அதனை உறுதியும் படுத்தியிருக்கிறார் கூகுளின் செய்தித் தொடர்பாளர் டான் ஜாக்ஸன். நெட்ஃபிலிக்ஸைப் போல ஸ்பாட்டிஃபையும் கூகுளின் கட்டண சேவையைப் பயன்படுத்தும் பொருட்டு தனித்துவமான சலுகை ஒன்றை கூகுளிடமிருந்து பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது. இவற்றுக்கு இடையில் ஆப்பிளின் ஆப்ஸ்டோரில் 15% கட்டணம் செலுத்த நெட்ஃபிலிக்ஸ் ஒப்புக் கொண்டிருப்பது குறிப்பிடத்தக்கது.