மருத்துவரின் புரியாத கையெழுத்தை புரிய வைக்க இதோ வந்துவிட்டது கூகிள் லென்ஸ்
மேம்படுத்தப்பட்ட கூகிள் தேடல், Google Pay பயனர்களுக்கான பாதுகாப்பு அம்சங்கள் மற்றும் மருத்துவர்களின் கையால் எழுதப்பட்ட மருந்துச் சீட்டுகளை, மக்களுக்கு தெளிவாகக் காட்டும் ஒரு செயலி என பல அம்சங்களை இந்தியர்களுக்காக, கூகிள் நிறுவனம் வெளியிடவிருக்கிறது. செயற்கை நுண்ணறிவு மற்றும் மெஷின் லேர்னிங் துணை கொண்டு, கையால் எழுதப்பட்ட மருந்துசீட்டில் உள்ள மருந்துகளை அடையாளம் காண, மக்களுக்கு உதவும் வகையில் கூகிள் மேம்படுத்தப்பட்டுள்ளது. இந்த தேடல், கூகிள் லென்ஸ் செயலி மூலம் செய்யப்படும். மக்கள் மருந்துச் சீட்டின் படத்தைக் கிளிக் செய்து, அதை 'photo library'இல் பதிவேற்ற வேண்டும். பின்னர் அந்த மருந்து சீட்டின் புகைப்படத்தைக்கொண்டு, கூகிள் லென்ஸ் செயலி, எழுதப்பட்டுள்ள மருந்துகளை கண்டறிந்து, மருந்துகளின் விவரங்களை வெளியிடும்.
கூகிள் லென்ஸ்
"கையால் எழுதப்பட்ட மருத்துவ ஆவணங்களை, டிஜிட்டல் மயமாக்குவதன் மூலம், மருந்து கடைக்காரர்கள் மற்றும் தினசரி இதை உபயோகிப்பவர்களுக்கு, பெரிய உதவியாக அமையும். இருப்பினும், இந்த தொழில்நுட்பத்தை முழுமையாக அணுகாமல், ஒரு துணையாக மட்டுமே வைத்துக் கொள்ள வேண்டும்" என்று கூகுள் தெரிவித்துள்ளது. இந்த அம்சத்தை அனைவருக்கும் எப்போது வெளியிட திட்டமிட்டுள்ளது என்ற விவரங்களை நிறுவனம் இன்னும் வெளியிடவில்லை. அதேபோல், Google Pay செயலியில், மோசடிகளை தவிர்க்கும் பொருட்டு, ஏதேனும் சந்தேகத்திற்குரிய செயல்பாட்டைக் கண்டறிந்தால் மக்களை எச்சரிக்கும் வகையில், பல்லடுக்கு அறிவார்ந்த எச்சரிக்கைகளை அறிமுகப்படுத்தவுள்ளதாக கூறப்படுகிறது. ஆண்ட்ராய்டில் உள்ள, Files by Google செயலியை, தேசிய eGovernance பிரிவுடன் இணைத்து, நேரடியாக மக்கள் தங்களின் டிஜிட்டல் ஆவணங்களை அணுகுவதற்கு வசதியாக மற்றவிருப்பதாகவும், கூகுள் அறிவித்தது.