Page Loader
பயன்பாட்டில் இல்லாத கணக்குகள் நீக்கம்.. கூகுளின் புதிய அறிவிப்பு!
புதிய அறிவிப்பை வெளியிட்ட கூகுள்

பயன்பாட்டில் இல்லாத கணக்குகள் நீக்கம்.. கூகுளின் புதிய அறிவிப்பு!

எழுதியவர் Prasanna Venkatesh
May 17, 2023
10:53 am

செய்தி முன்னோட்டம்

சில வாரங்களுக்கு முன்பு பயன்பாட்டில் இல்லாத ட்விட்டர் கணக்குகளை அத்தளத்திலிருந்து நீக்கவிருப்பதாக ட்வீட் செய்திருந்தார் அந்நிறுவனத்தின் அப்போதைய சிஇஓ எலான் மஸ்க். தற்போது கூகுளும் அதே போன்றதொரு அறிவிப்பை வெளியிட்டிருக்கிறது. பயன்பாட்டில் இல்லாத கூகுள் கணக்குகளையும், அதில் இருக்கும் தகவல்களையும் நீக்கவிருப்பதாக அந்நிறுவனம் தங்கள் அதிகாரப்பூர்வ வலைப்பதிவின் மூலம் அறிவித்திருக்கிறது. குறைந்தபட்சம் இரண்டு ஆண்டுகள் பயன்படுத்தப்படாமல், உள்நுழையப்படாமல் இருக்கும் கணக்குகளை நீக்கவிருப்பதாக அந்நிறுவனம் குறிப்பிட்டிருக்கிறது. பயன்பாட்டில் இல்லாத கணக்குகள் ஹேக் செய்யப்பட்டு தவறான செயல்களுக்கு உபயோகப்படுத்தப்படலாம். எனவே, பயனர்களின் பாதுகாப்பை மனதில் கொண்டே இந்த முடிவை எடுத்திருப்பதாகத் தெரிவித்திருக்கிறது கூகுள். இனி வரும் ஆண்டுகளிலும் இரண்டு ஆண்டுகளுக்கு மேல் ஒரு கணக்கு பயன்படுத்தப்படாமல் இருந்தால், அந்தக் கணக்கு நீக்கப்படும் என்று தெரிவித்திருக்கிறது கூகுள்.

கூகுள்

என்ன செய்யவிருக்கிறது கூகுள்: 

இந்த அறிவிப்பை இப்போது வெளியிட்டாலும் படிப்படியாகவே இது நடைமுறைப்படுத்தப்படும் எனத் தெரிவித்திருக்கிறது அந்நிறுவனம். மேலும், ஒரு கணக்கை தங்கள் தளத்தில் இருந்து நீக்குவதற்கு முன் அந்தக் கணக்கிற்கும், அதன் மீட்புக் கணக்கிற்கு இது குறித்து தெரியப்படுத்த பல்வேறு மின்னஞ்சல்கள் அனுப்பப்படும் என்றும், அதன் பின்பும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாத கணக்குளே தளத்திலிருந்து நீக்கப்படும் என்று அதன் வலைப்பதிவில் குறிப்பிட்டிருக்கிறது கூகுள் நிறுவனம். முதலில், உருவாக்கப்பட்டு பயன்படுத்தவேபடாத கூகுள் கணக்குகளை நீக்கவிருப்பதாக அந்நிறுவனம் குறிப்பிட்டிருக்கிறது. இரண்டு வருடங்களில் ஒரு கூகுள் கணக்கில் இருந்து மின்னஞ்சலைத் திறந்திருந்தாலோ, அந்தக் கணக்கின் கூகுள் டிரைவைப் பயன்படுத்தியிருந்தாலோ, அந்தக் கணக்கிலிருந்து யூடியூப் காணொளியைப் பார்த்திருந்தாலோ, தேடுபொறியைப் பயன்படுத்தியிருந்தாலோ அது செயல்பாட்டில் இருக்கு கணக்காகவே கருதப்படும் என அந்நிறுவனம் குறிப்பிட்டிருக்கிறது.