பயனாளர்கள் தனியுரிமை தொடர்பாக வழக்கில் தீர்வு காணவிருக்கும் கூகுள்
செய்தி முன்னோட்டம்
அமெரிக்காவில் பயனாளர் தனியுரிமை தொடர்பான வழக்கு ஒன்றில் வழக்கு தொடர்ந்தவர்களுடன் பரஸ்பர தீர்வு காண முன்வந்திருக்கிறது கூகுள்.
உலகளவில் தங்களது பயனாளர்களுக்கு கூகுள் வழங்கி வரும் பல்வேறு சேவைகளுள் ஒன்று க்ரோம் உலாவி சேவை. இந்த சேவையில், இன்காக்னிட்டோ (Incognito) என்ற தனியுரிமை வசதி ஒன்றையும் வழங்கி வருகிறது கூகுள்.
இந்த வசதியானது, பயனாளர்கள் தேடும் தகவல்களைய யாரும் அறிந்து கொள்ள முடியாத வகையில் தனியுரிமையைக் கொண்டிருப்பதாக பல்வேறு இடங்களிலும் குறிப்பிடுகிறது கூகுள்.
ஆனால், இந்த வசதியைப் பயன்படுத்தி தேடும் பயனர் தகவல்களையும் கூகுள் நிறுவனம் தங்களுடைய விளம்பரத் தேவைகளுக்காக சேகரித்துப் பயன்படுத்துவதாக, அமெரிக்காவில் வழக்கு தொடுக்கப்பட்டது.
கூகுள்
பரஸ்பர தீர்வுக்கு ஒப்புக் கொண்ட கூகுள்:
2020ம் ஆண்டு கூகுள் மீது தொடுக்கப்பட்ட இந்த வழக்கானது, ஒரு கிளாஸ் ஆக்ஷன் வழக்காகப் பதிவு செய்யப்பட்டது. அதாவது, ஒரு குறிப்பிட்ட நபர் மட்டுமல்லாமல், ஒரு குறிப்பிட்ட சேவையினால் பாதிக்கப்பட்ட பலரும் இணைந்து ஒன்றாக வழக்கு தொடுப்பது.
அந்த வகையில், இந்த வழக்கில் பாதிக்கப்பட்ட ஒவ்வொரு பயனாளருக்கு தலா 5,000 டாலர்கள் கொடுக்க வேண்டும் எனக் கேட்டுக் கொள்ளப்பட்டது.
அப்படி கொடுக்கப்படும் பட்சத்தில், கூகுள் நிறுவனம் 5 பில்லியன் டாலர்களுக்கு மேல் தீர்வுத்தொகையாகக் கொடுக்க வேண்டியிருக்கும்.
ஆனால், பரஸ்பரமாக ஒரு தீர்வானது பிப்ரவரி இறுதிக்குள் நீதிமன்றத்தால் அதிகாரப்பூர்வமாக எட்டப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதற்கு முன்னரும் இதே போன்று தகவல் பகிர்வு தொடர்பான வழக்கு ஒன்றில் 23 மில்லியன் டாலர்களை கூகுள் செலுத்தியிருப்பது குறிப்பிடத்தக்கது.