சிறிய ஆன்லைன் தளங்களில் தீவிரவாத உள்ளடக்கங்களைக் கட்டுப்படுத்த புதிய கருவி: கூகுள்
கூகுளின் தாய் நிறுவனமான ஆல்ஃபபெட்டின் கீழ் இயங்கும், கூகுளின் ஒரு பிரிவான 'ஜிக்ஸா'வின் மூலம் (Jigsaw) சிறிய ஆன்லைன் தளங்கள், தீவிரவாத உள்ளடக்கங்களுக்கு எதிரான நடவடிக்கைகளை எடுக்கவும், அப்படியான உள்ளடக்கங்களை தங்களது தளங்களில் குறைக்கவும் தேவையான புதிய கருவி ஒன்றை உருவாக்கியிருக்கிறது கூகுள். கூகுளின் ஜிக்ஸா பிரிவானது தீவிரவாத குழுக்களால் அல்லது தீவிரவாத கருத்துக்களுடன் உருவாக்கப்படும் உள்ளடக்கங்கள் மற்றும் தவறான, போலியான உள்ளடக்கங்களைக் கண்டறிவதற்காககவும் களைவதற்காகவும் செயப்பட்டு வரும் ஒரு பிரிவாகும். இந்த ஜிக்ஸா பிரிவானது 'Tech Against Terrorism' என்ற மற்றொரு லாபநோக்கமற்ற குழுவுடன் இணைந்து மேற்கூறிய வகையில் சிறு ஆன்லைன் தளங்கள் பயன்படுத்தும் வகையிலான 'ஆல்டிட்யூடு' (Altitude) என்ற கருவியை உருவாக்கியிருக்கிறது.
சிறிய தளங்கள் பயன்படுத்தும் வகையிலான 'ஆல்டிட்யூடு' கருவி:
பயனாளர்களால் உருவாக்கப்படும் உள்ளடக்கங்களைக் கொண்டிருக்கும் ஆன்லைன் தளங்கள் இந்தப் புதிய ஆல்டிட்யூடு கருவைியைப் பயன்படுத்தி, தங்களுடைய தளங்களில் பதிவிடப்படும் தீவிரவாதம் தொடர்பான, தீவிரவாதத்தை ஆதரிக்கும் உள்ளடக்கங்களைக் கண்டறிந்து அதனைக் கட்டுப்படுத்த முடியும். மேலும், இந்த கருவியானது ஒரு தளத்தில் பதிவிடப்பட்டிருக்கும் குறிப்பிட்ட உள்ளடக்கமானது எந்த தீவிரவாத குழுவுடன் தொடர்புடையது என்பது குறித்த தகவல்களையும் வழங்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தத் திட்டத்திற்காக Tech Against Terrorism குழுவின் தீவிரவாதம் தொடர்பான தகவல் தளத்தைப் பயன்படுத்தியிருக்கின்றன. ஐக்கிய நாடுகள் சபையின் ஆதரவு பெற்ற இந்தக் குழுவின் தீவிரவாதம் தொடர்பான தகவல் தளத்தை ஏற்கனவே பல்வேறு பெருநிறுவனங்கள் பயன்படுத்தி வருவது குறிப்பிடத்தக்கது.